வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட பீஞ்சமந்தை மலைப் பகுதியில் உள்ள செங்காடு கிராமத்தில், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் திருவிழா செப்டம்பர் 21, 2025 அன்று நடைபெற்றது.

Advertisment

இதில், அல்லேரி பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் திருவிழாவில் தகராறு செய்ததாகவும், இதனால் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இதைத் தொடர்ந்து, அல்லேரி மலை கிராமத்தைச் சேர்ந்தவர்கள், செங்காடு கிராம மக்களைக் கத்தி, கோடாரி ஆகியவற்றால் தாக்கி, பொருட்களை அடித்து சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் பலருக்கு கை, கால், தலை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. ஆனால், தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்ட செங்காடு கிராம மக்களையே காவல்துறை கைது செய்ய முயன்றதாகவும், ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகக் கூறி, கிராம மக்கள் காவலர்களை விரட்டியுள்ளனர்.

மேலும், கிராம மக்கள் சில காவலர்களைச் சிறைபிடித்து வைத்ததாகத் தகவல். சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) உள்ளிட்ட காவலர்கள் விரைந்து சென்று, மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சட்டப்படியும் நியாயப்படியும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து, சிறைபிடிக்கப்பட்ட காவலர்களை மீட்டனர். இதுகுறித்து, வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று வருகிறது.