கோப்புப்படம்
தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இது போன்ற சூழலில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும் வலியுறுத்தி பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். இதற்கிடையே கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் நிகழ்வுகளும், மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது, தாக்குதல் நடத்துவது போன்ற சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.
அந்த வகையில் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் கடந்த 18ஆம் தேதி (18.02.2026) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து இலங்கை காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட அனைத்து மீனவர்களும் தாயகம் திரும்புவதற்கும், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கும் உடனடி தூதரக நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு நேற்று முன்தினம் (19.02.2026) கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்கள் இலங்கை அரசையும், கடற்படையையும் கண்டித்து இன்று (21.02.2026) ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 22 மீனவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு நாள் வேலை நிறுத்தம் காரணமாக 800க்கும் மேற்பட்ட படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சுமார் 6 முதல் 7 கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
Follow Us