ரத்தக் காயங்களுடன் காணப்பட்ட 1-ஆம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுவனான சிதம்பரபாண்டியை காட்டுப் பகுதியிலிருந்து மீட்ட சிலர், விருதுநகர் மாவட்டம் – மல்லாங்கிணர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விருதுநகரில் கரும்புச்சாறு விற்கும் மாரீஸ்வரியின் கணவர் மருதுபாண்டி மூன்று வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். மாரீஸ்வரியின் மகன்தான் சிதம்பரபாண்டி. அடுத்து, செல்வம் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு விருதுநகரில் வசித்து வருகிறார் மாரீஸ்வரி. முதல் கணவருக்குப் பிறந்த சிதம்பரபாண்டியை மாரீஸ்வரியின் பெற்றோர் இலுப்பையூர் கிராமத்தில் பராமரித்து வருகின்றனர். சிதம்பரபாண்டியும் இலுப்பையூர் அரசு நடுநிலைப்பள்ளியில் 1-வது வகுப்பு படித்துவருகிறான். பள்ளி விடுமுறை காரணமாக விருதுநகரிலுள்ள தன்னுடைய அம்மா மாரீஸ்வரியின் வீட்டுக்கு வந்து தங்கியிருக்கிறான். வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிதம்பரபாண்டி காணாமல் போய்விட, கணவர் செல்வத்துடன் சேர்ந்து மகனைத் தேடிய மாரீஸ்வரி, விருதுநகர் மேற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், கல்குறிச்சி – பந்தனேந்தல் அருகே காட்டுப்பகுதியிலிருந்து சிதம்பரபாண்டி மீட்கப்பட்டுள்ளான்.
திருவிழாவிற்காக வந்த சிதம்பரபாண்டியை வெளியே அழைத்துச்சென்ற செல்வம், காட்டுப்பகுதியில் பாட்டிலால் கழுத்தை அறுத்துக் கொல்ல முயன்று, அங்கேயே விட்டுவிட்டு, விருதுநகர் வீட்டுக்கு வந்துவிட்டார். விசாரணை மூலம் இத்தகவலை அறிந்த விருதுநகர் மேற்கு காவல்நிலைய போலீசார் சிறுவனின் 2-வது தந்தை செல்வத்தைக் கைது செய்துள்ளனர்.
இதனிடையே, விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிதம்பரபாண்டி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளான். செல்வம் ஏன் சிறுவனைக் கொலை செய்ய முயற்சித்தான் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.