குஜராத் மாநிலம் வதோதராவில் ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் பாலத்தில் சென்று கொண்டிருந்த கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் திடீரென ஏற்பட்ட இந்த விபத்தில் ஆற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. விபத்து நேர்ந்த பகுதியில் பொதுமக்கள் மற்றும் மீட்புப் படையினர் உதவியுடன் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டது வருகிறது.
முதற்கட்டமாக இந்த விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. சம்பந்தப்பட்ட பாலம் பழமையான பாலம் என்பதால் கனரக வாகனங்கள் பாலத்தை பயன்படுத்தும் போது குறிப்பிட்ட வேகத்தில் தான் செல்ல வேண்டும் என பல கட்டுப்பாடுகள் இருந்த போதிலும் பாலத்தின் உறுதித் தன்மை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளதால், தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. உள்ளூர் நீச்சல் படை வீரர்கள், படகுகள், அந்த பகுதி மக்கள், பேரிடர் மீட்புப் படையினர் என பலரும் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், விபத்து நடந்த இடத்தில் இருந்து இதயத்தை உடைக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், தண்ணீரில் நீந்தியபடி 40 வயதான பெண் ஒருவர் வேதனையோடு கதறி அழுது நீரில் மூழ்கிக் கொண்டிருந்த தனது மகனை காப்பாற்றுமாறு அருகில் இருந்தவர்களிடம் கெஞ்சி உதவி கேட்கிறார். ‘என் மகன் தண்ணீர்ல் மூழ்கிக் கொண்டிருக்கிறான்’ என்று அந்த பெண் அலறியபடியே கதறி அழுகிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. அந்த பெண், தனது மகன், மகள், கணவர் மற்றும் மருமகனுடன் பாக்தானாவுக்குச் சென்று கொண்டிருந்தார். அந்த காரின் டிக்கிக்கு அருகே இந்த பெண் அமர்ந்திருந்ததால், விபத்தில் சிக்காமல் கண்ணாடியை உடைத்து தப்பித்துள்ளார். இருப்பினும், அவரது குடும்ப உறுப்பினர்கள் விபத்தில் சிக்கிக் கொண்டனர்.