நடப்பாண்டில் நடந்த ஐபிஎல் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைபற்றியது. 17 வருடத்திற்கு பிறகு முதல் முறையாக ஐ.பி.எல் கோப்பையை வென்றதால், ஆர்சிபி அணியின் வெற்றிப் பேரணி கடந்த ஜூன் 4ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இதனை காண லட்சக்கணக்கானோர் அங்கு திரண்டதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி, சிறுவர்கள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 45க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

35 ஆயிரம் பேர் அமரக்கூடிய மைதானத்தில், 2 முதல் 3 லட்சம் பேர் வந்திருந்ததால் இந்த துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது என்றும், கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கு ஆர்சிபி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்றும் காவல்துறை அறிவுறுத்தலை மீறி வெற்றி பெற்ற அடுத்த நாளே வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்தியதாக ஆர்சிபி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.சி.பி. அணி நிர்வாகம், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (கே.எஸ்.சி.ஏ), டி.என்.ஏ நெட்வொர்க்ஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது கப்பன் பார்க் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து கர்நாடகா உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டு விசாரணை நடத்தி வருகிறது.

சமீபத்தில், கர்நாடகா கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை கர்நாடகா அரசு கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், ஆர்சிபி நிர்வாகத்தின் கவனக்குறைவே இந்த கூட்ட நெரிசலுக்கு காரணம் என்று கர்நாடகா அரசு குற்றம் சாட்டியது. அதே சமயம், ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் தங்களது அன்புக்குரியவர்களை இழந்த குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் தங்களது துக்கத்தை வெளிப்படுத்தி வந்தனர். இதில் குறிப்பாக, கூட்ட நெரிசலில் தனது ஒரே மகனை இழந்த தந்தை ஒருவர், மகனின் சமாதியில் படுத்து கதறி அழுகும் காட்சிகள் பார்ப்போரை கண்கலங்க வைத்தது.

இந்த நிலையில், கூட்ட நெரிசலில் உயிரிழந்த 15 வயது சிறுமியின் பிரேத பரிசோதனையின் போது அவரது காதணிகள் திருடப்பட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். ஆர்சிபி கூட்ட நெரிசலில் 15 வயது சிறுமி திவ்யான்ஷ் உயிரிழந்தார். இவருக்கு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட போது காதணிகள் திருடப்பட்டதாக அவரது தாய் அஸ்வின் குற்றம் சாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து அஸ்வினி கூறியதாவது, ‘பிரேத பரிசோதனைக்குப் பிறகு காதணிகள், உடைகள் மற்றும் காலணிகள் உட்பட பல தனிப்பட்ட பொருட்கள் காணாமல் போயுள்ளது. இது குறித்து டீன் உள்பட மருத்துவமனை ஊழியர்களை அணுகினோம். பல காவல் நிலையங்களுக்குச் சென்றும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. நாங்கள் எல்லா பொருட்களையும் கேட்கவில்லை. எங்களுக்குத் தேவையானது அவளுடைய காதணிகள் மட்டுமே. அவை குடும்ப உறுப்பினர்களால் பரிசாக வழங்கப்பட்டவை. அவள் எப்போதும் அவற்றை அணிந்திருந்தாள். எங்கள் மகளை இழந்தோம், ஆனால் நாங்கள் இன்னும் அவளுடைய நினைவுகளுடன் வாழ்கிறோம். இந்தக் காதணிகள் அதன் ஒரு பகுதியாக இருந்தன’ என்று கூறினார்.