Mother of baby who went missing from hospital rescued in Karuvela forest Photograph: (pudukottai)
புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் மதகம் அருகிலுள்ள திராபிடிங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி காளியம்மாள் (39). கர்ப்பிணியான இவர் கடந்த மாதம் 26 ந் தேதி பிரசவத்திற்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அன்றே அறுவைச் சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தொடர் சிகிச்சையில் இருந்த காளியம்மாள் மற்றும் குழந்தையை கவனித்துக்கொள்ள அவரது மாமியார் சிந்தாமணி (70) மருத்துவமனையில் துணைக்கு இருந்துள்ளார்.இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் சுமார் 2 மணிக்கு வார்டில் இருந்து சிகிச்சை உடையுடன் கீழே இறங்கி வந்த காளியம்மாள் பின்பக்க வழியாக அங்கிருந்து வெளியேறி சென்றுள்ளார். நீண்ட நேரமாக காளியம்மாளை காணாததால் உறவினர்களும், மருத்துவமனை ஊழியர்களும் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை.போலீசாருக்கு தகவல் கிடைக்க அவர்களும் தேடினர்.
அதன் பிறகு மருத்துவமனை கண்காணிப்பு கேமரா மற்றும் சாலை ஓரங்களில் கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை பார்த்து போலீசாரும் உறவினர்களும் இரவு பகலாக தேடியுள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய காளியம்மாள் கீரமங்கலம் சாலையில் சென்றவர் குறிப்பிட்ட தூரத்திற்கு பிறகு செல்லவில்லை என்பதை இன்று சனிக்கிழமை மதியம் கண்டுபிடித்து மூக்குடி செல்லும் சாலையில் தரணி நகர் பகுதிப் பக்கம் சென்றது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து தேடிய போது ஆள் நடமாட்டமே இல்லாத சீமைக் கருவேலங்காட்டுக்குள் மருத்துவமனையில் பயன்படுத்திய அதே வெள்ளை உடையுடன் அமர்ந்திருப்பதைப் பார்த்து அவரை மீட்டு மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். விசாரணையில் காளியம்மாள் கூறும் போது, அறுவை சிகிச்சையால் அதிகமான வலி இருந்தது. அதற்காக ஊசி போட்ட பிறகு எனக்கு நிதானம் இல்லாமல் நடந்து சென்று விட்டேன். நேற்று மதியம் முதல் சாப்பாடு இல்லாமல் இருட்டில் இருந்தேன். வெளியே போக வழி தெரியவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் நேற்று மாலை அறந்தாங்கி பகுதியில் கனமழை பெய்த போது காளியம்மாள் எங்கிருந்தார். ஈரத் தரையில் எப்படி தூங்கினார் என்பது குறித்து அவரால் பதில் சொல்ல முடியவில்லை.
குழந்தை பெற்ற பெண் ஒரு நாள் முழுவதும் உணவு, தண்ணீர் இல்லாமல் ஆள் நடமாட்டம் இல்லாத கருவேலங்காட்டுக்குள் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.