கடந்த நவம்பர் 25 அன்று தென்காசி மாவட்டம் கடையநல்லூரையடுத்த துரைச்சாமிபுரத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 5 பெண்கள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அவர்களில் புளியங்குடியைச் சேர்ந்த மல்லிகாவும் ஒருவர். தன் உறவினரின் துக்க நிகழ்ச்சிக்காக ஆய்க்குடி சென்ற போது தான் அந்தக் கோர விபத்தில் சிக்கி பலியாகியிருக்கிறார். பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு மல்லிகாவின் உடல் புளியங்குடியிலுள்ள அவரது வீட்டிற்குக் கொண்டு வரப்பட்ட போது அவரது பிள்ளைகள், உறவினர் அந்தத் தெருவே கதறியிருக்கிறார்கள்.

Advertisment

மல்லிகாவிற்கு ஒரு ஆண் இரண்டு பெண் பிள்ளைகள். பெண் பிள்ளைகளில் ஒருவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளி. மல்லிகாவின் கணவர் குழந்தைகள் சிறுவயதாக இருந்த போதே காலமாகி விட்டார். அடிப்படையில் வேலை பார்த்தால் தான் உணவு என்றிருந்த அந்தக் குடும்பத்தின் தாய் மல்லிகா, பீடி சுற்றி குழந்தைகளைக் காப்பாற்றி வந்ததுடன் சுய நினைவில்லாத தனது 85 வயது தாயாரையும் கவனித்து வந்துள்ளார். இதோடு கண்பார்வையற்ற தன் மகள் கீர்த்திகாவையும் கஷ்டப்பட்டு வளர்த்து படிக்க வைத்துள்ளார். இந்த நிலையில் விபத்தில் மரணமடைந்த தன் தாயின் உடல் வந்ததும் 33 வயதேயான பெண் கீர்த்திகா தனது தாயின் உடலைத் தடவியபடி கதறியழுதது அங்கிருந்தவர்களின் மனதை பிழிய வைத்திருக்கிறது. 

Advertisment

kan

பார்க்க இயலாமல் கண்ணீர் கொப்பளிக்க கதறிய கீர்த்திகா, ‘நான் 5ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே என் தந்தை முத்துராமன் தவறிவிட்டார். என் அம்மா எண்னையும் அண்ணன் அக்காவையும் பீடி சுற்றி கஷ்டப்பட்டு வளர்த்தவர். என்னையும் படிக்க வைச்சார். என்னோட பிறந்தவுகளுக்கு திருமணமாகி விட்டது. பார்வையில்லாத எனக்கு திருமணமாகல்லை. அநாதை ஒண்டியாயிட்டேன். நா எம்.ஏ. ஆங்கிலம் படிச்சி பி.எட்.டும் படிச்சிருக்கேன். ரெண்டு முறை டெட் எக்ஸாமில் தேர்ச்சியாகியுள்ளேன். கணிப்பொறி தட்டச்சும் தேர்ச்சி பெற்றுள்ளேன். தகப்பன் இல்லாத என்னை படிக்க வைச்சு காப்பாத்துன தாயாரையும் விபத்துல இழந்திட்டேன். என் வாழ்க்கையே இருண்டு போயிருச்சே. முதலமைச்சர் ஐயா, எனக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கி கண் தெரியாத என் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும். இது போல நிகழ்வு இனி யாருக்கும் நடக்கக் கூடாது ஐயா’ என்று கும்பிட்டபடி வானத்தைப் பார்த்துக் கதறியிருக்கிறார் கீர்த்திகா.

இந்தப் பெண்ணின் தவிப்பு முதல்வர் ஸ்டாலினுக்குத் தெரியவர உடனடியாக கைப்பேசி மூலம், அந்த பெண்ணிடம் பேசிய முதல்வர் ஆறுதல் சொன்னதோடு அவளது கோரிக்கையை ஏற்று அவளுக்கு அங்கேயுள்ள நகராட்சியில் டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர் (DATA ENTRY OPERATOR) பணியை வழங்கியதைத் தெரிவிக்க தவித்த அந்தப் பெண் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்திருக்கிறார். முதல்வரின் உடனடி உதவியால் நெகிழ்ந்து போன கீர்த்திகா உடம்பு படபடக்க, ‘முதலமைச்சர் ஐயா என்கிட்ட பேசுனாக. வேலை குடுத்தப்ப சந்தோஷமான்னு கேட்டாக. சந்தோஷம்ய்யான்னு சொன்னேன். அவுக வேலை குடுத்ததக் கேக்க என்னோட அம்மா இல்லாமப் போயிட்டாகளே’ என்று கதறியவர், ‘தன் உசுரக் குடுத்து என்னோட அம்மா எனக்கு வேலை வாங்கிக் குடுத்திருக்கா’ என்றார் கண்களில் கண்ணீர் அணைகட்ட... தென்காசி மாவட்ட ஆட்சியரான கமல்கிஷோர், பார்வையற்ற கீர்த்திகாவிற்கான அரசு உத்தரவை நேரில் சென்று வழங்கினார்.

Advertisment