கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தினி. இவரது கணவர் உடல்நிலை சரியில்லாததால் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.  இந்த சூழ்நிலையில், சங்கராபுரம் அருகே உள்ள விரியூர் கிராமத்தைச் சேர்ந்த மரியா ரோசாரியோ என்பவரிடம் மருத்துவப் பரிசோதனைக்கு சென்றபோது நந்தினிக்கும் மரியா ரோசாரியாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, இருவரும் திருமணம் செய்து கொண்டு வேறொரு கிராமத்தில் வாடகை வீட்டில் தங்கி குடும்பம் நடத்தியதாக கூறப்படுகிறது.

Advertisment

இதுகுறித்து ரொசாரியோ தாய் கிறிஸ்தவ மேரிக்கு தெரிய வர, அவர்களுடன் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அவர், மருமகள் நந்தினியை சாங்கியம் செய்வதற்காக அழைத்துச் செல்வதாக மகனிடம் தெரிவித்து நந்தினியை அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் இரண்டு நாட்கள் ஆகியும் நந்தினி வீடு திரும்பாததால் ரோசாரியோ தனது தாய் கிறிஸ்துவ மேரிடம் கேட்டுள்ளார். அதற்கு கிறிஸ்துவ மேரி, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் ரோசாரியோவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நந்தினியின் செல்போன் எண்ணுக்கு ரோசாரியோ தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆஃப் என வந்துள்ளது.

Advertisment

இதில் மேலும் சந்தேகமடைந்த மரியா ரோசாரியோ, சங்கராபுரம் காவல் நிலையத்தில் தனது மனைவியை காணவில்லை என்று புகார் அளித்தார். புகாரைப் பெற்ற காவல்துறையினர், முதற்கட்டமாக கிறிஸ்துவ மேரியை கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், நந்தினியை சாங்கியம் செய்வதற்காக சோழம்பட்டு மணி நதி கரைக்கு அழைத்துச் சென்ற கிறிஸ்துவ மேரி, நந்தினியின் கழுத்தை அறுத்து கொலை செய்து அங்கேயே புதைத்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நந்தினியின் உடலை தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.