mother committed cruel to her child who kept crying because of hunger
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கட்டிட வேலை பார்த்து வருகிறார் ராஜேந்திரா (21). இவர் தனது மனைவி மம்தா (20) மற்றும் பிறந்து இரண்டு மாதங்களே ஆன ஆண் குழந்தையுடன் வசித்து வந்தார். இந்த தம்பதியினர், அவர்கள் வேலை செய்யும் கட்டிடத்தின் அருகிலேயே கூடாரம் அமைத்துத் தங்கியிருந்தனர். இந்த நிலையில், கடந்த 24ஆம் தேதியன்று வேலை முடித்துவிட்டு மதியம் உணவு அருந்துவதற்காக ராஜேந்திரா தனது குடிசைக்கு வந்துள்ளார்.
அப்போது, தனது இரண்டு மாத குழந்தை அடுப்பில் எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். குழந்தை எரிந்து கொண்டிருப்பதை மம்தா பார்த்தபடியே அமைதியாக அமர்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்த ராஜேந்திரா அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். பின்னர், சிறிது நேரத்தில் சுயநினைவுக்கு வந்த ராஜேந்திரா, இது குறித்து காவல்நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, மம்தாவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் அளித்த வாக்குமூலங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விசாரணையில், மதிய வேளையில் குழந்தை பசியால் அழுதுள்ளது. மம்தா குழந்தைக்குப் பால் கொடுத்துள்ளார். அதன் பின்னரும், குழந்தை தொடர்ந்து அழுததால், அவர் குழந்தையின் வாயில் துணியை வைத்து அடைந்துள்ளார். இதனால், குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அப்போது, உயிருக்குப் போராடிய அந்த குழந்தை காலால் உதைத்துள்ளது. பின்னர், குழந்தையின் கைகால்களை அவர் இறுகக் கட்டியுள்ளார். இதனால் குழந்தை, அசையவும் முடியாமல், கதறி அழவும் முடியாத நிலைக்குச் சென்றுள்ளது. பின்னர், குழந்தையை எரிந்துகொண்டிருந்த அடுப்பில் தூக்கி வீசியுள்ளார். குழந்தை உயிருக்குப் போராடிய நிலையில் அடுப்பில் எரிந்து கொண்டிருந்ததை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராஜேந்திரா இது குறித்துக் காவல் தகவல் கொடுத்தார் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, குழந்தை தொடர்ந்து அழுததால் தான் கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்த தம்பதி, வேலை நிமித்தமாக ஐதராபாத் வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us