Mother blocks road with 15-day-old baby for Tragedy befalls husband
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் தாலுகா வத்தலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய் (25). இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் ரெகுநாதபுரம் அருகே உள்ள முதலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெண்ணிலா (22) என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணமாகி கடந்த 15 நாட்களுக்கு முன்பு வெண்ணிலாவிற்கு ஆண் குழந்தை பிறந்து தாய் வீட்டில் தங்கியுள்ளார்.
இந்த நிலையில், விஜய் இன்று காலை கட்டட வேலைக்கு செல்லும் முன்பு மாமியார் வீட்டில் இருந்த தன் குழந்தை மற்றும் மனைவியை பார்த்துவிட்டு வேலைக்குச் செல்லலாம் என்று தனது பைக்கில் வந்து, ‘குழந்தையை பத்திரமாக பார்த்துகோங்க, சீக்கிரமே நம்ம வீட்டுக்கு போயிடுவோம். ஏதாவது அவசரம்னா போன் பண்ணு உடனே வந்துடுறேன்’ என்று தன் மனைவியிடம் சொல்லிவிட்டு வேலைக்கு செல்வதற்காக மீண்டும் சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். அப்போது விஜய் மீது, அந்த வழியாகச் வந்த ஒரத்தநாடு தனியார் பள்ளிக்கு மாணவர்களை ஏற்ற வந்த பள்ளி வேன் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த விஜய்யை, மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/05/salai1-2025-12-05-22-15-41.jpg)
இந்த தகவல் கேட்டு, ‘குழந்தையை பத்திரமா பாத்துக்கனு சொல்லிட்டு போனாரே! இப்படி அவசரமா போகத்தான் சொன்னாரா’ என்று கதறிய வெண்ணிலா மயங்கி சரிந்தார். இந்த தகவல் அறிந்த விஜயின் உறவினர்கள் மருதன்கோன்விடுதி 4 ரோடு சந்திப்பில் மாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கணவரை விபத்தில் பறிகொடுத்த வெண்ணிலா தனது 15 நாள் பச்சிளங் குழந்தையுடன் வந்து கண்ணீரோடு கலந்து கொண்டது காண்போரை கண்கலங்க வைத்தது. குழந்தை பிறந்து 15 நாட்களில் தந்தை விபத்தில் இறந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. விபத்து குறித்து ரெகுநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளி வேனை பறிமுதல் செய்து வேன் ஓட்டுநர் ஒக்கநாடு கீழையூர் கிராமத்தைச் சேர்ந்த காசிநாதன் மகன் ஜானேஸ்வரனை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்
Follow Us