உத்தரபிரதேசத்தின் மீரட்டில் கடந்த வியாழக்கிழமை அன்று  பட்டியலினப்  பெண் ஒருவரும், அவரது 20 வயது மகள் என இருவரும், வயல்வெளியை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் உள்ள மருத்துவரிடம் உதவியாளராகப் பணிபுரிந்து வந்த பாரஸ் (வயது 22), ​கால்வாய் அருகே அவர்களை வழிமறித்து, அவர்களிடம் தவறாக நடந்து கொண்டார். இதனைக் கண்டித்த தாயை, அந்த நபர் கரும்பு வெட்டும் அரிவாளால் தாக்கியுள்ளார். பின்னர் பாரஸ், இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளார். தாயின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

Advertisment

இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இத்தகைய சூழலில் தான் சமூக ஆர்வலர்களும், பீம் ஆர்மி  உறுப்பினர்களும் குற்றவாளியை உடனடியாக கைது செய்யக் கோரி போராட்டங்களில் ஈடுபட்டனர். பாஜக தலைவர் சங்கீத் சோம் போன்றோருடன் பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். 48 மணி நேரத்திற்குள் குற்றவாளி கைது செய்யப்படுவார் என்றும், கடத்தப்பட்ட இளம் பெண் விரைவில் மீட்கப்படுவார் என்றும் சோம் உறுதியளித்தார். 

Advertisment

இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அன்று பெண்ணின் உடலை குடும்பத்தினர் வீட்டிற்கு கொண்டு சென்று இறுதி சடங்கு செய்யப்பட்டது. மேலும், அப்பகுதியில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபரால் கட்டப்பட்டதாகக் கூறப்படுவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காணாமல் போன இளம்பெண்ணை பத்திரமாக மீட்க வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். அதே சமயம் குற்றவாளியைக் கண்டுபிடிக்கவும், கடத்தப்பட்ட இளம் பெண்ணைக் மீட்டெடுகும் பொருட்டும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 10 குழுக்களை காவல்துறை அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

siren-police

மேலும், “பாதிக்கப்பட்டக் குடும்பத்திற்கு முதல்வர் அலுவலகத்திலிருந்து ரூ. 10 லட்சம் காசோலை வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு குடும்பத்திற்கு துப்பாக்கி உரிமம் வழங்குவது குறித்தும் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது” என்று மாவட்ட ஆட்சியர் வி.கே. சிங் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) தலைவரும்,  அம்மாநில முன்னாள் முதலமைச்சர் மாயாவதி, “இந்த சம்பவம் சோகமான, வெட்கக்கேடான மற்றும் மிகுந்த கவலைக்குரியது ஆகும். பெண்களின் கண்ணியத்தை மீறும் இதுபோன்ற குற்றவாளிகள், கொடூரமான செயல்களில்  ஈடுபடுவதைத்  தடுக்க, குற்றவாளிகள் மீது அரசாங்கம் உடனடியாகவும் கடுமையாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.  

Advertisment

சமாஜ்வாதி கட்சித் தலைவரும், அம்மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், “பாஜக அரசாங்கம் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும், “அரசாங்கத்தின் இந்த செயலே அந்த அரசாங்கத்தை வீழ்த்த வழிவகுக்கும்” என்றும் கடுமையாக சாடினார். இதனைத் தொடர்ந்து நடந்த குற்ற சம்பவத்திற்கு நீதி கேட்டு சமாஜ்வாதி கட்சித் தொண்டர்கள் கமிஷரி பூங்காவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அதோடு மட்டுமல்லாமல், பட்டியலின பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் பலரும் குற்றம் சாட்டிவருகின்றனர்.