கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்று (08/07/2025) தனியார் பள்ளி வேன் ஒன்று ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த பயணிகள் ரயில் தனியார் பள்ளி வேன் மீது மோதி தூக்கி வீசப்பட்ட சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
மொத்தம் ஐந்து பேர் அந்த பள்ளி வேனில் பயணித்துள்ளனர். ஆறாம் வகுப்பு மாணவன் நிமலேஷ், பதினொன்றாம் வகுப்பு மாணவி சாருமதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வேன் ஓட்டுநர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், செழியன் என்ற சிறுவன் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் போகும் வழியிலேயே உயிரிழந்தான். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது.
சம்பந்தப்பட்ட ரயில்வே கேட் பகுதியில் பணியிலிருந்த கேட் கீப்பர் பங்கஜ் சர்மா அலட்சியமாக இருந்ததாகக் கூறி அப்பகுதி மக்கள் தாக்கியதால் போலீசார் பாதுகாப்புடன் பங்கஜ் சர்மாவை பாதுகாப்பான இடத்தில் வைத்திருந்தனர். இந்த சம்பவத்தில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி வந்தனர். முன்னதாக பள்ளி வேனை இயக்கிய ஓட்டுநர் சங்கர் கேட்டுக் கொண்டதன் பேரில் கேட்டை திறந்ததாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மா தெரிவித்திருந்தார்.
ஆனால் கேட் கீப்பர் சொன்ன தகவலை சிகிச்சையில் உள்ள ஓட்டுநர் சங்கரும், இந்த விபத்தில் சிக்கித் தப்பிய பள்ளி மாணவன் விஸ்வேஸும் மறுத்திருந்தனர். குறிப்பாக மாணவன் விஸ்வேஷ் வெளியிட்டுள்ள வீடியோவில், ''கேட் எப்போதும் போல திறந்துதான் இருந்தது. ரயில் சென்றுவிட்டது என்றுதான் ஓட்டுநர் வேனை இயக்கினார். அப்போது கேட் கீப்பர் அங்கே இல்லை. அவர் உள்ளே இருந்தாரா அல்லது தூங்கிவிட்டாரா தெரியவில்லை. ஓட்டுநர் சொன்னதால்தான் கேட் திறக்கப்பட்டது என்பது தவறான தகவல். விபத்து நடந்த பிறகும் கூட கேட் கீப்பர் அங்கு வெளியே வரவில்லை'' என வாக்குமூலம் அளித்திருந்தார்.
இந்தநிலையில் கைது செய்யப்பட்ட கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் பங்கஜ் சர்மா தொடர்ச்சியாக கேட்டை திறந்து வைத்துவிட்டு தூங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஸ்டேஷன் மாஸ்டர் ரயில் வருவதை தொலைபேசி மூலம் தெரிவிக்க அழைத்த போதும் அவர் செல்போனை எடுக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. ஒரு முறை இரு முறை அல்ல இதுவரை ஐந்துக்கும் மேற்பட்ட முறை பணி நேரத்தில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கேட்டை மூடாமல் உறங்கியுள்ளது விசாரணை தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.