கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் மற்றும் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமா கோயில் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு ஆசிரியர்கள் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் சி. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அ. ரவி, இணை ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் பி. இளங்கோ, எஸ். மதியழகன், கபில்தேவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மாதவன் துவக்கி வைத்துப் பேசினார். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ரமேஷ் பாபு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருப்பையன் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டு பேசினர். போராட்டத்தில் பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர்களுக்கான, பதவி உயர்வுகள் மற்றும் பணப்பயன்கள் மற்றும் 7வது ஊதியக்குழு நிலுவைத்தொகைகளை உடனே வழங்க வேண்டும். 15 ஆண்டுகளாகப் பணி நிரந்தரம் செய்யப்படாத என்.எம்.ஆர் தொகுப்பூதியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஓய்வூதியர்களுக்கான மாத ஓய்வூதியம் கடந்த 14 மாதங்களாக வழங்கப்படவில்லை.
ஓய்வூதியர்களுக்கான பணப்பயன்கள், குறிப்பாக கம்யூட்டேசன் (Commutation), இ.எல் சரன்டர் ஒப்புவிப்புத் தொகைகள், பணிக்கொடை போன்றவை ஓய்வு பெற்றுப் பல ஆண்டுகள் ஆகியும் ஓய்வூதியர்களுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை. அத்தொகையினை உடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 1000க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டம் காலை 9.00 மணி முதல் தொடங்கி மாலை வரை நடைபெற்று வருகிறது. பல்கலைக்கழகத்தில் பணியைப் புறக்கணித்து பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மாணவர்களின் வகுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் 27ஆம் தேதி முதல் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாகப் போராட்ட கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
Follow Us