கடலூர் மாவட்டம், சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள கிரிம்சன் ஆர்கானிக் என்ற தனியார் ரசாயன தொழிற்சாலையில் 2025 செப்டம்பர் 5 அன்று காலை 10 மணியளவில் திடீரென விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், தொழிற்சாலையில் ரசாயனம் செல்லும் குழாயில் இருந்த கேஸ்கட் வெடித்ததால், அதிக அளவில் ரசாயனப் புகை மண்டலம் முழுவதும் பரவியது. இந்தப் புகையில் துர்நாற்றம் வீசியதாகவும், இதனால் குடிக்காடு மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு கண் எரிச்சல், மயக்கம், வாந்தி, மூச்சுத் திணறல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த விபத்தால் பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட 60-க்கும் மேற்பட்டோர் உடனடியாக மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் மருத்துவர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே, அந்தப் பகுதி மக்கள் கடலூர்-சிதம்பரம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர். தகவலின் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற எஸ்.பி. இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்ததையடுத்து, போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.