தெலுங்கானா மாநிலம்,மேடக் மாவட்டத்தின் பாஷமயிலரம் பகுதியில் சிகாச்சி இண்டஸ்ட்ரீஸ் எனும் தனியார் ரசாயன தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த தொழிற்சாலையில், மருந்து பொருட்களுக்கு தேவையான ரசாயனம் தயாரிக்கப்பட்டு வந்துள்ளது. இங்கு தெலுங்கா, ஆந்திரப் பிரதேசம் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வந்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று (30-06-25) காலை வழக்கம் போல் தொழிற்சாலை இயங்கி வந்துள்ளது. அப்போது, திடீரென்று சக்திவாய்ந்த தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கரமான விபத்தில், அந்த இடமே தீப்பிழம்பாக காட்சியளிக்கப்பட்டு, பல மாடி கட்டடம் தரைமட்டமாக்கப்பட்டு, அந்த இடமே இடிபாடுகளில் சிக்கியது. இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் அடிப்படையில், தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீ விபத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பயங்கரமான தீ விபத்தில் தற்போது வரை 42 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 20 பேர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இறந்த தொழிலாளர்கள் அனைவரும் பீகார், உத்தரப் பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவர். இதற்கிடையில், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களைத் தேடும் முயற்சிகளில் தீயணைப்புத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 12 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.