நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பிறகு அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு புதைக்கப்பட்டது. இதனால் பல மாணவ, மாணவிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். இந்நிலையில் தான் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக 7.5% உள் இடஒதுகீட்டை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தியது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரசுப் பள்ளி மாணவர்கள் கடந்த 6 ஆண்டுகளாக மருத்தும் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வில் மிகக்கடுமையான கேள்விகளைக் கொடுத்து மீண்டும் மாணவர்களை மனஉளைச்சலை ஏற்படுத்தினாலும் அதிலும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் சாதித்துள்ளனர். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 7.5% உள் இட ஒதுக்கீடு பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு இன்று நடந்தது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/30/a4609-2025-07-30-23-40-08.jpg)
இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து சுமார் 40 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வழக்கம் போல கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ரக்ஷனா மதுரை தனியார் கல்லூரியிலும் கொத்தமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சுபிதா சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி, சந்தியா சென்னை தனியார் மருத்துவக்கல்லூரியிலும் எம்.பி.பி.எஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது. இதேபோல மேலும், கறம்பக்குடி, வயலோகம், சந்தைப்பேட்டை, கீரனூர் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள பல அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 20 க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.
6 வது ஆண்டாக சாதித்த அரசுப் பள்ளி
கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 7.5% உள் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்ட முதல் ஆண்டில் இருந்து கடந்த 5 ஆண்டுகளாக 27 மாணவிகள் மருத்துவம் படித்து வரும் நிலையில் தொடர்ந்து 6 வது ஆண்டாக இந்த ஆண்டும் ஒரு மாணவி மருத்துவ இடம் பெற்றுள்ளார். அதாவது 6 ஆண்டுகளில் மொத்தம் 28 மாணவிகள் மருத்துவம் படித்து தொடர் சாதனை செய்துள்ளனர்.