சுமார் 16 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் தற்போது வடகிழக்குப் பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. பருவ மழையினால் அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தி பெருகியுள்ளது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில் இல்லாத அளவு, இந்த ஆண்டு இதுவரை சுமார் 16 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்; சுமார் 9 பேர் மரணமடைந்துள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. குறிப்பாக சென்னை, திருவள்ளூர் மற்றும் கோவை மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலால் அதிக அளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Advertisment

திமுக அரசே இந்த மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால், டெங்குவை கட்டுப்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மக்களைக் காக்க உடனடியாக கீழ்க்கண்ட பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன். உள்ளாட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு, சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் மழை நீர் தேங்காமல் உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் கடைகள், வீடுகள் மற்றும் சாலை ஓரங்களில் உள்ள பழைய டயர்கள், தேங்காய் ஓடுகள், உடைந்த பழைய பிளாஸ்டிக் மற்றும் பாத்திரங்கள் ஆகியவற்றில் தேங்கி இருக்கும் தண்ணீரை அப்புறப்படுத்தும் நடவடிக்கை எடுப்பதுடன், உள்ளாட்சிப் பணியாளர்கள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

Advertisment

உள்ளாட்சிப் பணியாளர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில், குடிநீர் தொட்டிகளில் குளோரின் மருந்து தெளித்தல்; சாக்கடைகளில் கொசு மருந்து அடிப்பது போன்ற முறையான பணிகளை மேற்கொள்ள வேண்டும். உள்ளாட்சிப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் இருக்கிறதா என்பதை விசாரித்து, காய்ச்சல் இருப்பதைக் கண்டுபிடித்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் கூடுதல் மருத்துவ முகாம்களை நடத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். டெங்கு மற்றும் மலேரியா போன்ற காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசு மருத்துவமனைகளுக்கு படையெடுக்கிறார்கள். அதிக நோயாளிகள் அரசு மருத்துவமனைகளுக்கு வருவதால், தேவையான மருந்து, மாத்திரைகளை மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பற்றாக்குறை இல்லாமல் வழங்க வேண்டும்.

சிகிச்சைக்காக அரசு மேலும், பெரும்பான்மையான அரசு மருத்துவமனைகளில் கழிவுநீர் தேங்கி நிற்பதாகவும், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், மருத்துவமனைகளுக்கு வரும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தெரிவிக்கின்றனர். அரசு மருத்துவமனையை நம்பி வரும் ஏழை, எளிய மக்களின் நலன் கருதி, மருத்துவமனைகளின் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். எப்போதுமே 'தும்பை விட்டு வாலை பிடிக்கும் கதையாக' மக்கள் பாதிக்கப்பட்டபின் நடவடிக்கை எடுக்கிறோம் என்று சால்ஜாப்பு கூறாமல், இனியாவது முன்னெச்சரிக்கையோடு செயல்பட வேண்டுமென்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.  

Advertisment