'montha Storm' - Predictions Realized Photograph: (weather)
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாகக் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வரக்கூடிய நேரத்தில் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், காவிரிப்படுகை மாவட்டங்களிலும் மழை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் இன்று (24.10.2025) நண்பகல் 01.50 மணியளவில் வெளியிடப்பட்ட வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்புபடி, “நேற்று (23.10.2025) தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று (24.10.2025) காலை 05.30 மணி அளவில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இன்று 08:30 மணி அளவில், அதே பகுதிகளில் நிலவுகிறது.
நாளை (25-10-2025) கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறினால் அதற்கு தாய்லாந்து நாடு பரிந்துரைத்த மோன்ந்தா (Montha) என்று பெயரிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் உருவானால் தொடர்ந்து நகர்ந்து செல்லக்கூடிய முன்கணிப்பு படங்களை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அந்தமான் கடற்பரப்பை ஒட்டிருக்கக்கூடிய இடங்களில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து இருக்கிறது. அங்கிருந்து தொடர்ந்து நகரக்கூடிய திசை என்பது மேற்கு வடமேற்கு திசையில் இருந்து குறிப்பாக நேராக சென்னைக்கு நேர் தென்கிழக்கு திசையில் நிலைகொள்ளும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் இருந்து நகர வாய்ப்பிருப்பதால் குறைந்தபட்சமாக சென்னைக்கு நெருக்கமாக 200 கிலோ மீட்டர் தொலைவில் புயல் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டாலும் அதை உறுதி செய்யப்படாத சூழ்நிலையே உள்ளது. தாய்லாந்து மொழியில் 'மோந்தா'என்பது வசீகரத்தை குறிக்கும் சொல் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow Us