Lok sabha adjourned sine die
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. இந்த கூட்டத்தொடரில், பஹல்காம் தாக்குதல், பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர், இந்தியா - பாகிஸ்தான் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பேச்சு, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் விவகாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலுமே எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதில், கடந்த ஜூலை 28ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் பேசினர். இதனையடுத்து, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் எம்.பிக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து நாடாளுமன்ற வளாகத்தில் ஒவ்வொரு நாளும் போராட்டம் நடத்தி வந்தனர். ஆனால், ஒரு சுயாதீன அமைப்பான தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்காளர் திருத்த நடவடிக்கைக்கு மத்திய அரசு பதிலளிக்க முடியாது என எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கெனவே நிராகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பிக்கள் இரு அவைகளிலும் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையில், ஆன்லைன் சூதாட்ட ஒழுங்குமுறை மசோதா, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், பிரதமர், ஒன்றிய அமைச்சர்கள், முதலமைச்சர்கள் அல்லது அமைச்சர்கள் போன்றவர்கள் கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தாலோ அல்லது காவலில் இருந்தாலோ அவர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா, ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கும் மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிலையில், கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று (21-08-25) நாடாளுமன்றத்தில் தொடங்கியது. நாடாளுமன்ற இரு அவைகளும் கூடியதும், வாக்காளர் பட்டியல் முறைகேடு, பதவி நீக்க மசோதா உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மக்களவை கூடியதும், மீண்டும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபாநாயகர் ஓம் பிர்லா தேதி குறிப்பிடாமல் மக்களவையை ஒத்திவைத்தார். இதனால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. 21 நாட்கள் திட்டமிடப்பட்ட மக்களவை, 34 மணி நேரம் மட்டுமே செயல்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.