‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எனும் தனது சுற்றுப்பயணத்தில்இன்று திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் மற்றும் ராதாபுரம் மாவட்டங்களில் மக்களை சந்தித்து உரையாடினார் எடப்பாடி பழனிச்சாமி.
அப்போது இபிஎஸ்,“திருச்செந்தூரில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானை வணங்குகிறேன். இது ஒரு புனித பூமி, இரண்டாம் படை வீடு. முழுக்க விவசாயிகள், மீனவர்கள், பனைத் தொழிலாளிகள் என உழைப்பாளர்கள் நிறைந்த பூமி. வாழை, வெற்றிலை, முருங்கை அதிக விளைச்சல் இருக்கிறது. இங்கிருந்து பனைத் தொழிலாளர்களின் பனங்கற்கண்டு, பனங்கருப்பட்டி எல்லா பக்கமும் விற்பனையாகிறது. மீனவர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்திருக்கிறோம்.
வாழை பயிரிட்டால் காற்று வந்து ஒடிந்துவிடுகிறது. பேரிடர் காலத்தில் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். பயிர்க்காப்பீடு திட்டத்திலும் கணக்கிட்டு வழங்கப்படும். உப்பளம் தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும். மீனவர் தடைக்கால நிவாரணம் போல, உப்பள தொழிலாளர்களுக்கும் மழைக்கால நிவாரணம் வழங்கப்படும். தற்போது வழங்கப்படுகின்ற மீன்பிடித் தடை கால நிவாரணம் அதிகரித்து வழங்கப்படும்.
இங்கு ஏழை மக்கள் அதிகம் உள்ளனர். அவர்களுக்கு மனை இருந்தால் வீடு கட்டிக் கொடுக்கப்படும். மனை இல்லையென்றால் மனை வாங்கிக்கொடுத்து, அதில் வீடு கட்டிக் கொடுக்கப்படும். பொங்கல் அன்று 2500 ரூபாய் கொடுத்தோம். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தீபாவளிக்கு பெண்களுக்கு சேலை வழங்கப்படும். விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் கொடுத்தோம். ஐந்தாண்டுகளில் இரண்டு முறை பயிர்க்கடன் தள்ளுபடி செய்தோம். ஏரி குளம், குட்டைகள், கண்மாய்கள் நிரம்புவதற்கு குடிமராமத்துத் திட்டம் செயல்படுத்தினோம். இந்த திமுக அரசு அதனை நிறுத்திவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி வந்ததும் அத்திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும்.
நான் இங்கு அடிக்கடி கரண்ட் போவதைக் கவனித்தேன். ஷிஃப்ட் முறையில் விவசாயிகளுக்கு மின்சாரம் கொடுக்குறார்கள். அதிமுக ஆட்சி அமைந்ததும் மீண்டும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.
பயிர்க்காப்பீடு திட்டம் மூலம் அதிகம் இழப்பீடு பெற்றுக்கொடுத்தது அதிமுக அரசு. இந்த அரசு காப்பீடு செய்வதில்லை, இதனால் விவசாயிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது.அதிமுக அரசு அமைந்ததும் மீண்டும் பயிர்க் காப்பீடுத் திட்டம் கொண்டுவரப்படும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 20 நாளில் 11 பாலியல் சீண்டல்கள் நடந்துள்ளன, ஒரு மாவட்டத்தில் மட்டும் இத்தனை என்றால்,தமிழ்நாடு முழுவதும் எண்ணிப்பாருங்கள்..? தங்கம் விலை நிலவரம் போல இப்போது கொலை நிலவரம் பார்க்கப்படுகிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. கஞ்சா விற்பனை அதிகம் நடக்கிறது.
இன்று காலையில் கிறிஸ்தவ பிஷப் ஒருவர் என்னிடம் வேதனையைக் கொட்டினார். ‘எங்க பள்ளி மாணவர்கள் எல்லாம் மோசமான நிலைக்குப் போய்ட்டாங்க, கஞ்சா அதிகம் பயன்படுத்துறாங்க, கட்டுப்படுத்த வேண்டும்’’ என்றார்கள். நானும் அதைத்தான் மூன்றாண்டுகளாகப் பேசிகொண்டிருக்கிறேன். எதுவுமே நடக்கவில்லை. போதை ஆசாமிகளை தட்டிக்கேட்க முடியவில்லை, கேட்டால் கொலை செய்துவிடுவார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டு பேரை கொலை செய்து புதைத்துவிட்டனர். ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு இணையாக தமிழக போலீஸ் பேசப்பட்டது. இன்று திமுகவுக்கு ஏவல் துறையாக மாறிவிட்டதால் இப்படிப்பட்ட குற்றச் செயல்கள் நடக்கின்றன.
நலம் காக்கும் ஸ்டாலின் என்று இப்போது ஒரு திட்டம் தொடங்கியிருக்கிறார். ஏற்கனவே அதிமுக திட்டத்தை ஸ்டிக்கர் ஒட்டி நிறைய திட்டம் நிறைவேற்றிவிட்டார்கள். அதிமுக ஆட்சியில் அம்மா ஆரோக்கிய திட்டம் கொண்டுவந்தோம். 2016ல் அம்மா இருக்கும்போதே கொண்டுவந்தோம். இதன் பெயரை மாற்றி நலம் காக்கும் ஸ்டாலின் என்று அவர் பெயரை வைத்துக்கொண்டார்.
மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார அளவில்வியாழக்கிழமைதோறும் 385 முகாம்கள் என ஒவ்வொரு மாதத்துக்கும் 1,540 முகாம்கள் அம்மா ஆரோக்கிய திட்டம் மூலம் நடத்தப்பட்டது. 16 வகையான மருத்துவப் பரிசோதனை செய்தோம். அதைத்தான் இன்றும் செய்து மக்களை ஏமாற்றுகிறார்.
அதிமுக ஆட்சியில் அம்மா மினி கிளினிக் கொண்டுவந்தோம். அதை மூடிவிட்டனர்.அதை திறந்தாலேஏழை மக்கள் பயன்பெறுவார்கள். நீங்கள்ஒருநாள் முகாம் நடத்திவிட்டு மூடிவிட்டு போய்விடுவீர்கள். அதன் பிறகு யார் வைத்தியம் பார்ப்பது? நோய் சொல்லிக்கொண்டா வரும்? நோய் வரும்போதுதான் வைத்தியம் பார்க்க வேண்டும். அப்படி காலத்துக்கு ஏற்றவாறு அதிமுக செய்தது. மீண்டும் அதிமுக அரசு அமைந்ததும் அம்மா மினி கிளினிக் திட்டம் தொடங்கப்படும்.
தாலிக்குத் தங்கம் திட்டம், மாணவர்களுக்கு லேப்டாப் திட்டத்தையும் நிறுத்திட்டாங்க. அதிமுக ஆட்சி அமைந்ததும் இவை மீண்டும் தொடங்கப்படும்.
உங்களுடன் ஸ்டாலின் என்று இப்போது நோட்டீஸ் எடுத்துக்கொண்டு அரசு ஊழியர்கள் வீடுவீடாக வருகிறார்கள். கட்சி வளர்ச்சிகாக அரசு பணத்தில் இதற்காக 600 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள். 50 மாதங்கள் மக்களைப் பற்றி சிந்திக்காதவருக்கு இப்போது தான்மக்கள் நினைவு வந்திருக்கிறது. 46 பிரச்னைகளை 45 நாளில் தீர்ப்பார்களாம்.இன்னும் 8 மாதமே இருக்கிறது. அதற்குள் எங்க செய்யப்போறீங்க..? இப்படித்தான் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது புகார் பெட்டி திட்டம் கொண்டுவந்து மனுக்களை வாங்கினார். ஆட்சிக்கு வந்ததும் நிவர்த்தி செய்வதாகச் சொன்னார். அப்புறம் எதுக்கு இது?
இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் ஸ்டாலினாம். எதில் தெரியுமா? கடன் வாங்குவதில். இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடு. 5 ஆண்டு முடிவில் 5 லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமை. 75 ஆண்டு கால தமிழக வரலாற்றில் இருந்த மொத்த கடனை விட திமுக அரசின் நான்காண்டு கடன் அதிகம். வரி போட்டுத் தான் இந்த கடனை அடைக்க வேண்டும். இந்த நகராட்சியில் அதிகமாக வரி போட்டதாகச் சொன்னார்கள். திமுக ஆட்சியில் 100% வரி உயர்த்திட்டாங்க. கடன் சுமையை மக்கள் தான் சுமக்க வேண்டும். கொரோனா காலத்தில் குடிக்கக் கூட தண்ணீர் இல்லை, கஜா புயல், வறட்சி என எதிலும் விலைவாசி உயரவில்லை. இன்று எந்த பிரச்னையும் இல்லை என்றாலும் எதற்கு கடன் வாங்குகிறார்கள் என்று தெரியவில்லை.
வரப்போவது மிக முக்கியமான தேர்தல்.இதை மையமாக வைத்து வாரிசு அரசியலுக்கு முன்னுரிமை கொடுக்கப் பார்க்கிறார்கள். வாரிசு அரசியலை விரட்டியடிக்க வேண்டும். இது உங்களுடைய கட்சி, உங்கள் அரசு. மக்கள் தேவையை நிறைவேற்றுகின்ற அரசாக செயல்படும். எனவே தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெற வையுங்கள். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்று பேசி முடித்தார்.