வட மாநிலங்களில் கடந்த காலங்களில் போலி நீதிமன்றம், போலி டோல்கேட், போலி மருத்துவமனை, போலி ஐ.பி.எஸ்., போலி காவல் நிலையம் என்று பல  மோசடி சம்பங்கள் நிகழ்ந்து இருக்கின்றன.  அதிலும், கடந்த ஆண்டு எஸ்.பி.ஐ. வங்கிக்கே போலி கிளையை அமைத்து பண மோசடி செய்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினர். இப்படி இந்திய அளவில் மட்டுமே பல விதமான மோசடிகள் நடந்து வந்த நிலையில், இவற்றுக்கெல்லாம் உச்சமாக, உலகில் இல்லாத நாட்டிற்கு போலி தூதரகம் அமைத்து, மத்திய அரசைக்கு ஒருவர் விபுதி அடித்த சம்பவம் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

பாஜக தலைமையில் ஆட்சி நடைபெறும் உத்தரப் பிரதேசத்தில், உலகில் இல்லாத ஒரு நாட்டிற்கு ஒருவர் போலி தூதரகம் அமைத்து, அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவி வருவதாக மத்திய புலனாய்வு அமைப்பிற்கு ரகசியத் தகவல் கிடைத்தது. உடனடியாக, மத்திய புலனாய்வு அமைப்பு இந்தத் தகவலை உத்தரப் பிரதேச அரசுக்கு தெரிவித்தது. அதன் பேரில், உத்தரப் பிரதேச சிறப்பு காவல் படையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்தனர்.

காசியாபாத் மாவட்டத்தில் உள்ள கவின் நகரில், தூதரக அலுவலகம் இருக்கும் இடத்திற்கே உண்டான அமைதியுடன், இரண்டு மாடிகளைக் கொண்ட ஒரு ஆடம்பர பங்களா இருந்திருக்கிறது.. வெளியே ஆடி, பென்ஸ், பி.எம்.டபிள்யூ உள்ளிட்ட விலையுயர்ந்த சொகுசு கார்கள் வெளிநாட்டுக் கொடிகளுடன் நிறுத்தப்பட்டிருந்தன. மேலும், கதவில் "கிராண்ட் டச்சி ஆஃப் வெஸ்டார்டிகா" என்றும், "எச்.இ.எச்.வி. (HEHV) ஜெயின், கௌரவ தூதர்" என்றும் பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது. பார்ப்பதற்கு முற்றிலும் அயலக தூதரக அலுவலகம் போலவே இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறப்பு காவல் படை அதிகாரிகள், கதவைத் திறந்து உள்ளே சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், காசியாபாத்தைச் சேர்ந்த ஹர்ஷ்வர்தன் ஜெயின் என்ற நபர், இந்த பங்களாவை வாடகைக்கு எடுத்து கடந்த ஏழு ஆண்டுகளாக போலி தூதரகத்தை நடத்தி வந்தது தெரியவந்தது. மேலும், வெஸ்டார்டிகா, சபோர்கா, பவுல்வியா, லோடோனியா போன்ற இல்லாத நாடுகளின்  தூதராகத் தன்னைக் காட்டிக்கொண்ட ஹர்ஷ்வர்தன், இந்த நாடுகளில் வேலை வழங்குவதாகக் கூறி பல இளைஞர்களை ஏமாற்றியுள்ளார். எந்தவொரு சந்தேகமும் ஏற்படாமல் இருக்க, விலையுயர்ந்த கார்கள், போலி தூதரக பாஸ்போர்ட்கள், வெளிநாட்டு நாணயங்கள், மற்றும்  நாட்டின் முக்கிய தலைவர்களுடன் ஜெயின் இருப்பது போன்ற போலி புகைப்படங்களையும் பங்களாவில் வைத்திருந்தார்.

Advertisment

இதையடுத்து, ஜூலை 22-ஆம் தேதி ஹர்ஷ்வர்தன் ஜெயினை கைது செய்த போலீஸார், தூதரக கார்களுக்கு பயன்படுத்தப்பட்ட போலி நம்பர் பலகைகள், 34 நாடுகளின் அரசு முத்திரைகள், 14 நாடுகளின் போலி தூதரக பாஸ்போர்ட்கள், வெளிநாட்டு ஆவணங்கள், 44 லட்சம் ரூபாய் ரொக்கம், மற்றும் வெளிநாட்டு கரன்சிகளைப் பறிமுதல் செய்தனர்.

ஹர்ஷ்வர்தன், வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகவும், போலி நிறுவனங்கள் மூலம் பணப் பரிமாற்றம் செய்தும் பணம் சம்பாதித்து வந்துள்ளார். மேலும், பிரதமர் மோடி, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் சந்தித்தது போன்று மாஃபிங் செய்யப்பட்ட  புகைப்படங்களையும் வைத்திருந்திருக்கிறார்.

இதுகுறித்து பேசிய உத்தரப் பிரதேச சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குநர் அமிதாப் யாஷ், "முதற்கட்ட விசாரணையில், வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்டதும், சர்ச்சைக்குரிய சாமியார் சந்திரசாமி மற்றும் சர்வதேச ஆயுத வியாபாரிகளுடன் ஹர்ஷ்வர்தன் ஜெயினுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது என கூறியிருக்கிறார்.

Advertisment

தூதரக அதிகாரி என்று கூறி, ஹர்ஷ்வர்தன் பல்வேறு நாடுகளுக்கு சென்று வந்துள்ளார். ஒரு நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில், ஏழு ஆண்டுகளாக போலி தூதரகம் நடத்தி பண மோசடி செய்து வந்துள்ளார். இதை அவர் தனியாக செய்திருக்க வாய்ப்பில்லை. மத்திய அரசு இதை முறையாக விசாரித்து, சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.