Modi inaugurates new Prime Minister's Office
பிரதமர் மோடி, இன்று டெல்லியில் புதிய பிரதமர் அலுவலகத்தைத் திறந்து வைத்தார். சுதந்திரத்திற்கு பிறகான அனைத்து பிரதமர்களும் பயன்படுத்தி வந்த அலுவலகத்திலிருந்து, தற்போது புதிய கட்டிடத்திற்குப் பிரதமர் அலுவலகம் மாற்றப்பட்டுள்ளது. புதிய பிரதமர் அலுவலகத்திற்கு ‘சேவா தீர்த்தம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில், தனது பணியைத் தொடங்கிய முதல் நாளான இன்று, ஐந்து திட்டங்களுக்குப் பிரதமர் ஒப்புதல் வழங்கினார். அதன்படி, பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோருக்கான நலத்திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.
அதாவது, விபத்தில் சிக்கியவர்களின் உயிரை காப்பாற்றும் விதமாக, அவர்களுக்கு 1.50 லட்சம் ரூபாய் வரையிலான கட்டணமில்லா சிகிச்சை வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். இதனால், விபத்துக்குள்ளானவர்களுக்கான சிகிச்சை உடனடியாக கிடைக்கப்பெற்று, அவர்களின் உயிர் காப்பாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக வருகின்ற 2029 ஆம் ஆண்டிற்குள் 6 கோடி பெண் லட்சாதிபதிகளை உருவாக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினார்.
அதனை தொடர்ந்து, இந்தியாவில் விவசாயிகளின் ஒட்டு மொத்த விவசாய உட்கட்டமைப்பிற்கான நிதி சம்பந்தமான கோப்புகளில் கையெழுத்திட்டார். அதன்படி, விவசாயிகளுக்காக ஒதுக்கப்படும் நிதியை ஒரு லட்சம் கோடியிலிருந்து இரண்டு லட்சம் கோடியாக உயர்த்தியுள்ளார். மேலும், ஸ்டார்ட்டப் இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்ட செயல்பாடுகள் தொடங்கப்பட்ட உள்ளது. அதற்கும் ஒப்புதல் வழங்கும் விதமாக, அதற்கான கோப்புகளிலும் பிரதமர் கையெழுத்திட்டுள்ளார். மேலும், இன்று புதிதாகத் திறக்கப்பட்டுள்ள பிரதமர் அலுவலகத்தில் இருந்து நிர்வாக செயல்பாடுகள் துவங்கி இருப்பதைக் குறிக்கும் வகையில், சிறப்பு 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய பிரதமர் அலுவலக கட்டிடத்தில் அமைச்சரவை செயலகம் மற்றும் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் செயலகமும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow Us