கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற் கர்நாடகா மாநிலச் சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதில், 224 சட்டமன்றத் தொகுதிகளில் அதிகபட்சமான 135 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சி அமையும்போதே முதல்வர் பதவிக்கு சித்தராமையாவுக்கும், டி.கே. சிவக்குமாருக்கு கடும் போட்டி மோதல் நிலவியது.

இதனையடுத்து, நீண்ட இழுபறிக்குப் பிறகு கர்நாடகா முதல்வராக சித்தராமையாவையும், துணை முதல்வராக டி.கே. சிவக்குமாரையும் நியமித்து கட்சி மேலிடம் அறிவித்தது. மேலும், அதில் சித்தராமையா, டி.கே. சிவக்குமார் ஆகியோர் தலா 2.5 ஆண்டுகள் முதல்வராகப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கட்சி மேலிடம் கூறியதாகத் தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து, சித்தராமையா மாநில முதல்வராகவும் டி.கே.சிவக்குமார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர்.

சித்தராமையா முதல்வராக சராசரியாக 2 ஆண்டுகள் ஆன நிலையில், அடுத்த முதல்வர் பதவிக்கான விவாதம் கர்நாடகா காங்கிரஸுக்குள் எழுந்துள்ளது. தலைமை பதவி தொடர்பாக டி.கே.சிவக்குமாரை ஆதரித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ இக்பால் உசேன் கருத்து ஒன்றை கடந்த ஜூன் 23ஆம் தேதி தெரிவித்தார். செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இக்பால் உசேன், “டி.கே.சிவக்குமார் 200% நிச்சயமாக முதல்வராக வருவார். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 140 இடங்களுக்கு மேல் பெற்று சிவக்குமார் தலைமையில் அரசாங்கம் அமையும். இது கடவுள் மகாதேவப்பா மீது சத்தியம்” என்று கூறினார். இதனை தொடர்ந்து, அடுத்த முதல்வர் தொடர்பாக டி.கே.சிவக்குமாருக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிலர் ஆதரவு தெரிவித்தனர். இக்பால் உசேனின் பேச்சால், கர்நாடகா காங்கிரஸுக்குள் சர்ச்சையையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது. 

அடுத்த முதல்வர் பதவு தொடர்பாக கட்சிக்குள் குழப்பத்தையும், சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறி எம்.எல்.ஏ இக்பால் உசேனுக்கு கர்நாடகா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டி.கே.சிவகுமார் நேற்று (01-07-25) விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். அந்த நோட்டீஸில், ‘முதல்வர் மாற்றம் குறித்து நீங்கள் ஊடகங்களுக்கு அறிக்கை அளித்துள்ளீர்கள். கட்சிக்குள் குழப்பத்தையும் சங்கடத்தையும் ஏற்படுத்தும் வகையில் பொதுக் கருத்துக்களை நீங்கள் தெரிவித்துள்ளீர்கள். இந்தக் கருத்துக்கள் கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளன. இது கட்சி ஒழுக்கத்தை மீறுவதாகும். உங்கள் ஒழுக்கக்கேடான அறிக்கைகள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. எனவே, இந்த காரணம் கேட்கும் அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இந்த அறிவிப்பு கிடைத்த ஒரு வாரத்திற்குள் உங்கள் அறிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு உங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

கட்சியிடம் இருந்து காரணம் கேட்கும் நோட்டீஸ் வந்த பிறகும், டி.கே.சிவக்குமாரை முதல்வராக ஆக்க வேண்டும் என்று தனது முடிவில் உறுதியாக இருப்பதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ இக்பால் உசேன் கூறியுள்ளார். இன்று (02-07-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இக்பால் உசேன் “எனது முடிவில் நான் உறுதியாக இருக்கிறேன். எனக்கு மாற்றம் தேவை. எதிர்காலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும். நிறைய வளர்ச்சி வேண்டும், அதனால் மாற்றம் தேவை. டி.கே.சிவக்குமார் கட்சிக்காக கடுமையாக உழைத்து கட்சிக்கு 140 இடங்களைப் பெற்றுத் தந்துள்ளார். 2028இல் காங்கிர மீண்டும் ஆட்சிக்கு வருவதை உறுதி செய்ய அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவிடம் தெரிவித்தேன். ஊடகங்களில் பேச வேண்டாம் என்று கட்சி தலைமை கூறியது. நாம் பேச வேண்டும் என்று நான் சொன்னேன், டி.கே. சிவகுமார் எனது மாவட்டத்தைச் சேர்ந்தவர். கட்சித் தலைமை, அவரது பணி மற்றும் திட்டங்களைப் பார்த்துள்ளது. அவர் கோவிட்-19 இல் அரசாங்கத்திற்கு எதிராகவும் போராடினார். நான் ஒரு மாற்றத்தைக் கேட்கிறேன். சித்தராமையாவுக்கு ஏற்கனவே ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளில், இரண்டரை ஆண்டுகள் அவர் இருக்கிறார். நான் மாற்றத்தைக் கோரியுள்ளேன். அவர்கள் நேர்மறையான பதிலைப் பெற்று, அதைப் பற்றி நாங்கள் முடிவு செய்வோம் என்று கட்சித் தலைமை கூறியுள்ளது” எனத் தெரிவித்தார்.