தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வழிக்காட்டலின் படி, திருத்தணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருத்தணி ஒன்றியத்தில் உள்ள பீரகுப்பம் ஊராட்சியில், பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன், அப்பகுதி மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
சமீபத்தில், பீரகுப்பம் ஊராட்சியில் உள்ள பழங்குடியின மக்களின் குடியிருப்புப் பகுதியில் இரவு முழுவதும் தங்கிய சட்டமன்ற உறுப்பினர் சந்திரன், அவர்களின் கோரிக்கைகளையும், குறைகளையும் கேட்டறிந்தார். மறுநாள் அதிகாலையில், துறைசார் அதிகாரிகளை அழைத்து, குடிநீர், மின்சாரம், மற்றும் சாலை வசதிகளை உடனடியாக ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, துறைசார் அதிகாரிகள் உடனடியாகப் பணிகளைத் தொடங்கினர்.
தற்போது, மின்சார வசதி மற்றும் குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. மேலும், சாலை அமைப்பதற்கு அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு, மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த உடனடி நடவடிக்கைகளால், பீரகுப்பம் ஊராட்சி மக்கள் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்தனர்.தனது கோரிக்கையை ஏற்று, விரைவாகப் பணிகளைத் தொடங்கி, மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முயற்சித்த துறைசார் அரசு அதிகாரிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.