MLA passes issued in succession and a problem created by Edappadi Palaniswami's disciple
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவின்போது மகாதீபத்தை முன்னிட்டு திருக்கோவில் வளாகத்துக்குள், திருவண்ணாமலையைச் சேர்ந்த இரண்டு ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் பைனான்ஸியர்கள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் தரப்பட்ட மிக முக்கியமான பாஸ்களை அணிந்துக்கொண்டு கோவிலுக்குள் வந்து தீப தரிசனம் செய்தனர். இது மக்களிடையே அதிர்ச்சியையும், பலத்த சர்ச்சையையும் உருவாக்கியது. சட்டமன்ற உறுப்பினர் பாஸ்சை தவறாக பயன்படுத்தியவர்களிடம் விசாரணை நடத்தவேண்டும். அது எந்த சட்டமன்ற உறுப்பினருக்கு தந்த பாஸ்? அதை ஏன் அவர்களுக்கு தந்தார்? என விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. இது குறித்து விவரமாக நமது நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு என தனிப்பட்ட முறையில் தரப்பட்ட பாஸ், எப்படி ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு கிடைத்தது? அவர்கள் யார்? தமிழ்நாடு துணை சபாநயாகர் பிச்சாண்டியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அதனை சமூகவலைதளத்தில் பரப்பியது பரபரப்பானது. அவர்கள் யார் என விசாரணை நடத்தப்பட்டது. அதில் சட்டமன்ற உறுப்பினர்கள், பாஸ் அணிந்துக்கொண்டு இருந்தவர்கள் திருவண்ணாமலையில் ஜுவல்லரி வைத்துள்ள கஜ்ஜி மற்றும் அவரது மகன் என்பது தெரியவந்தது. அவர்கள் பிரபலமான தாகா டெவலப்பர்ஸ் என்கிற நிறுவனத்தில் பார்ட்னராகவும், பெரியளவில் பைனான்ஸியராகவும் உள்ளார்கள்.
அறநிலையத்துறை அதிகாரிகள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ் உங்களுக்கு யார் தந்தது என சம்மந்தப்பட்டவர்களிடம் விசாரித்துள்ளனர். அவர்கள் திருவண்ணாமலையை சேர்ந்த அதிமுக பிரமுகர்கள் இருவரை கைக்காட்டியுள்ளனர். இதுக்குறித்து அதிமுக மற்றும் அறநிலையத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பிரத்யேக பாஸ்களை திருவண்ணாமலை மாவட்டம் போளுர் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக மாவட்ட செயலாளருமான அக்ரி.கிருஷ்ணமூர்த்தி தான் அவர்களுக்கு தந்துள்ளார். சட்டமன்ற உறுப்பினராக அவர் இருப்பதால் அவருடைய பாஸ்சை தந்தாரா என கேட்டபோது, அதுதான் இல்லை என்கிறார்கள் அதிமுகவினர்.
தமிழ்நாட்டில் அதிமுகவுக்கு என 60 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களுக்கான தீபத்திருவிழா பாஸ்களை சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தந்துள்ளது இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம். அதனை பெற்றுக்கொண்ட உதவியாளர் அருண், அதிமுக எம்.எல்.ஏக்களிடம் கேட்டபோது, சிலர் மட்டும் பாஸ் வாங்கிக் கொண்டார்களாம், பலர் யாரும் பெரியதாக தீபத்தை காண செல்ல ஆர்வம் காட்டவில்லையாம். தன்னிடம் மீதியிருந்த பாஸ்களை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அக்ரி.கிருஷ்ணமூர்த்தியிடம் தரச்சொல்லி எடப்பாடி பழனிசாமி சொன்னதால் அவரிடம் தந்துள்ளார் அருண். அதனை வாங்கிவந்து தன்னிடம் வைத்திருந்துள்ளார் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி. அவரிடம்மிருந்து அவரின் நெருங்கிய ஆதரவாளர்களும், கட்சி நிர்வாகிகளுமான டிஸ்கோ.குணசேகரன், பர்குனகுமார் வாங்கி, உனக்கு இத்தனை, எனக்கு இத்தனை என பிரித்துக்கொண்டு அதனை அக்ரி.கிருஷ்ணமூர்த்தியிடம் கூறியுள்ளனர், அவரும் சரியென்றுள்ளார். வாங்கிய இருவரும் அதனை முக்கியபிரமுகர்களுக்கு தந்துள்ளனர். இதில் பர்குனகுமார் என்பவர் ஹோட்டல் வைத்துள்ளார், அங்கு தங்கியவர்களுக்கும் தந்ததாக கூறுகிறார்கள் அதிமுகவினர்.
இந்த விவகாரங்களை முழுவதும் விசாரித்து அறிந்துக்கொண்ட அறநிலையத்துறையினர், தங்கள் துறை தலைமைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். வேறு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அப்படியே அமைதியாகிவிட்டனர். அதிகாரம் இருந்தால் என்ன தவறு செய்தாலும் அதை கண்டுக்கொள்ளமாட்டோம் என்பது ஒருப்பக்கம் இருக்கட்டும். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமேயான பாஸ்சை வட்டி தொழில் செய்யும் பைனான்ஸியர்களுக்கு தூக்கி தருகிறார்கள் என்றால் இவர்கள் எம்.எல்.ஏக்கள் என்பவர்களை என்னவென அதிமுக தலைமை நினைத்துக்கொண்டு இருக்கிறது என்கிற கேள்வி எழுந்துள்ளது.
Follow Us