பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் நீடித்து வருகிறது. இதன் நீட்சியாக, பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அதிரடியாக அறிவித்தார்.

Advertisment

அதே போல், பாமகவில் ராமதாஸ் அணி, அன்புமணி அணி என இரு குழுக்களாக பிரிந்துள்ள நிலையில்.. இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்போக்கு நாள்தோறும் செய்திகளாக வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த சூழலில், பாமக உட்கட்சி பூசல் காரணமாக தற்போது அரங்கேறிய ஒரு சம்பவம்.. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அருள். இவர் பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸின் தீவிர ஆதரவாளர். கடந்த சில தினங்களுக்கு முன்பு.. அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது  அன்புமணி தரப்பு ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தங்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த அன்புமணி தரப்பினர் மீது சேலம் காவல் கண்காணிப்பாளரிடன் எம்எல்ஏ அருள் தரப்பினர் புகார் அளித்தனர்.

இந்நிலையில், வாழப்பாடியில் உள்ள கட்சியின் நிர்வாகி இல்லத்தில் நிகழ்ந்த இறுதிச் சடங்கில் பங்கேற்று விட்டு, பாமக எம்எல்ஏ அருள் கார் மூலம் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அங்குவந்த அன்புமணி ஆதரவு மாவட்டச் செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமையிலான கும்பல்.. எம்எல்ஏ அருளின் காரை நடுவழியில் மறித்து சரமாரியாகத் தாக்கியது. 50க்கும் மேற்பட்டோர் நடத்திய இந்த தாக்குதலில் 6 கார்கள் சேதமடைந்து.. கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. பரபரப்பான இந்த சூழலில், பலரும் அங்கு சரமாரியாக தாக்கப்பட்டனர். அந்த நேரத்தில், அங்கிருந்த போலீசார் உதவியுடன் எம்எல்ஏ அருள் உயிர் தப்பினார்.

Advertisment

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேட்டியளித்த எம்எல்ஏ அருள், "அன்புமணி ஆதரவாளர்கள் எங்களை கொலை செய்யும் நோக்கில் தாக்குதல் நடத்தினர். அன்புமணியின் டீசன்ட் அண்ட் டெவலப்மென்ட் பாலிடிக்ஸ் இதுதானா?" என்று கோபமாக கேள்வி எழுப்பினார். பாமக எம்.எல்.ஏ. அருள் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.