வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவதை இலக்காகக் கொண்டு, வாக்குச்சாவடி அளவில் திமுகவைப் பலப்படுத்த வாக்குச்சாவடி முகவர்கள் மண்டல பயிற்சி மாநாடுகளை திமுக நடத்தி வருகிறது. அதன்படி கடந்த 11ஆம் தேதி திருவடந்தையிலும், 14ஆம் தேதி திருப்பத்தூரிலும் மண்டல வாரியாக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு நடைபெற்று வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களுக்கு தேர்தல் களப்பணி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த இரு மாநாட்டிலும் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் பேசினார்.

Advertisment

இந்த நிலையில், மதுரை உத்தங்குடியில் திமுக தெற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு இன்று (21-02-26) நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள கூட்டத் திடலுக்கு வருகை தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கண்டவுடன் தொண்டர்கள் தங்களது கட்சித் துண்டை சுழற்றியபடி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். அதன் பின் மேடைக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு வைக்கப்பட்டிருந்த பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், அன்பழகன் ஆகியோரின் புகைப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Advertisment

அதன் பின்னர், இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “திமுக மக்களுக்காக உருவான இயக்கம். நாமெல்லாம் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் ரத்தம். அதனால் தான் நம் இயக்கத்தை தொட்டு பார்க்க வேண்டும், சீண்டி பார்க்க வேண்டும் என்று நினைத்தாலே தமிழ்நாடே திருப்பி பதிலடி கொடுக்கும் என்ற பயம் இருக்கிறது. எதிரிகளை அஞ்சி நடுங்க வைக்கிறது. திமுக மாதிரி அமைப்பு ரீதியாக வலுவான ஒரு அரசியல் கட்சியை யாராலும் காட்ட முடியாது. இப்போது நாம் காட்டுவது எல்லாம் சும்மா டிரெய்லர் தான். திருச்சியில் மெயின் பிக்சர்ஸ் காட்ட தயாராகிக் கொண்டிருக்கிறோம். நாம் ரெக்கார்ட் செய்தால் அதை யாராலும் பிரேக் செய்ய முடியாத ரெக்கார்டாக இருக்க வேண்டும். இந்த தெற்கு சீமையில் மொத்தம் இருக்கக்கூடிய தொகுதிகளையும் கழக கூட்டணி தான் வெற்றி பெற வேண்டும், அதை நீங்கள் தட்டி தூக்க வேண்டும்.

2019இல் இருந்து நம் கூட்டணிக்கு வெற்றி மேல் வெற்றி தான். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வாகியில் முழுமையான வெற்றியை மக்கள் நமக்கு வழங்கினார்கள். அப்போது இருந்ததை விட அதிகமான திட்டங்களை இப்போது நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். அதனால் இந்த முறை மிகப்பெரிய வெற்றியை உங்கள் மூலமாக நான் எதிர்பார்க்கிறேன். தனி பெரும்பான்மையான, தனித்துவமான ஆட்சி அமைப்போம் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. அண்மையில் நாம் அட்வான்ஸாக வழங்கின ரூ.5,000 உரிமைத் தொகையை பல ஊடகங்களும் நம்முடைய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்று சொன்னார்கள். அந்த அளவுக்கு எதிரிகள் கணிக்க முடியாதபடி நம்முடைய மூவ் இருந்தது. நாம் ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்ததில் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும், அடுத்து அவர்கள் உடனே போனது வங்கிகளில் இருந்து பணம் எடுக்க தான். ஒன்றிய அரசு மீதுள்ள பயத்தின் காரணமாக தான் அவர்கள் போனார்கள். அந்த ரூ.5,000 உரிமைத் தொகையை ஒன்றிய அரசு எடுத்துவிடுமோ என்ற பயந்த மக்கள், அந்த தொகையை உடனடியாக வங்கியில் இருந்து எடுக்க போய்விட்டார்கள். இது தான் மக்கள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், ஒன்றிய அரசு மேல் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கைக்கும் வித்தியாசம். மக்களுக்காக கொடுத்தால் அது திமுக அரசு, மக்களிடம் இருந்து எடுத்துக்கிட்டால் அது ஒன்றிய பா.ஜ.க அரசு” என்று பேசினார். 

Advertisment