சென்னையில் தமிழ்நாடு முதலீடுகள் செயலாக்க மாநாடு இன்று (12-02-26) நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற இந்த மாநாட்டில், புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்ட நிறுவனங்களின் திறப்பு விழா, புதிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து போன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
அதன் பின்னர் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “திராவிட மாடல் என்றால் மக்கள் நலனுக்காக இருக்கிற மாடல். இதையெல்லாம் உலகுக்கு எடுத்து சொல்லக்கூடிய மாநாடு தான் இந்த செயலாக்க மாநாடு. தமிழ்நாட்டின் வளர்ச்சியை பொறுத்துகொள்ள முடியாத ஒரு சிலருக்கு எங்களின் செயலின் மூலம் பதில் சொல்லும் மாநாடு தான் இந்த செயலாக்க மாநாடு. தொழில்துறையில் நாங்கள் செய்திருக்கூடிய ரெக்கார்டை அடுத்து நாங்கள் வந்துதான் முறியடிக்கப் போகிறோம் என்பதை அடித்து சொல்கிறேன். இந்த மாநாட்டில் மட்டும் 52 கம்பெனியுடைய திறப்பு விழா, 71 கம்பெனிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, இரண்டு புதிய கம்பெனிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் என சாதனை சொல்கிற மாநாடாக இது நடக்கிறது.
இந்தியாவிலேயே இது மாதிரியான மாநாடு எங்கும் நடந்தது இல்லை. பொதுவாக எல்லா மாநிலங்களும், எல்லா அரசுகளும் முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தி எங்கள் மாநிலத்தில் இவ்வளவு வாய்ப்பு இருக்கு என்று அழைப்பு விடுப்பார்கள். ஆனால், முதல் முறையாக எங்கள் மாநிலத்தில் நீங்கள் அமைக்கக்கூடிய பார்ட்னர்ஷிப் என்பதை அதையும் கடந்த ரிலேஷன்ஷிப்பாகவும், பிரண்ட்ஷிப்பாகவும் மக்களுக்கு நலன் கொடுக்கிறது என்று எடுத்து காட்டுகிற மாதிரி இந்த செயலாக்க மாநாடு நடக்கிறது.
தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தொழில் முனைவோர், தொழிலாளர்கள் என எல்லோருக்கும் நம்பிக்கை அளிக்கக்கூடிய மாநிலமாக நம் தமிழ்நாடு இருக்கிறது. இங்கு சமூக நீதியும் நிலை பெற வேண்டும், தொழில் வளர்ச்சியும் உறுதி செய்யப்பட வேண்டும். அப்போது தான் எல்லோருக்கும் எல்லாம், அனைத்து மாவட்ட வளர்ச்சி என்கிற இலக்கை அடைய முடியும் என்பதில் நாங்கள் மிக கவனமாக செயல்பட்டு வருகிறோம். திராவிட மாடல் ஆட்சியின் சிறப்பம்சம் என்னவென்றால் காழ்புணர்ச்சி அரசியல் செய்யாமல் மாநில நலனை முன்னிறுத்தி அரசியல் செய்வது தான். தொழில்துறை மட்டுமல்லாமல் எல்லா துறைகளிலும் கடந்த ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களாக இருந்தாலும் மாநில வளர்ச்சிக்கான திட்டங்களை கிடப்பில் போடாமல் எந்த பாகுபாடு பார்க்காமல் ஒத்துழைப்பு கொடுத்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்” என்று பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/12/mkstalinm-2026-02-12-17-12-06.jpg)