முதல்வர் மு க ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு சென்றுள்ளார். நேற்று மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெரு விழாவில் கலந்து கொண்டார். தொடர்ந்து பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். இந்த நிலையில் இன்று நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு ரூ.639 கோடியில் காயிதே மில்லத் நினைவு நூலகம், கூடுதல் மருத்துவமனை கட்டிடம் உள்ளிட்ட புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும் நெல்லை மாவட்டத்திற்கு 15 புதிய பஸ் போக்குவரத்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

Advertisment

பின்பு மேடையில் பேசிய அவர், “தமிழர்களாகிய நம்மளுடைய பண்பாடு தனித்துவமானது முற்போக்கானது. இந்திய துணை கண்டத்தினுடைய நாகரீகத்தின் தொட்டிலாகவும் உச்சமாகவும் இருந்தது. நம்முடைய தமிழ் மாநிலம் மட்டும் தான் அதற்கு பல இலக்கியச் சான்றுகள் இருக்கிறது. ஆனால் இலக்கிய சான்றுகள் மட்டுமே ஒருபோதும் வரலாற்று சான்றாகாது. எனவே அதை அறிவியல் ரீதியாக மெய்ப்பிக்கவும் தொல்லியல் சான்றுகளை சேகரிக்கவும் நாம் மேற்கொள்ளக்கூடிய காலப்பயணம் தான் அகழாய்வுகள். இந்த நிலையில்தான் கீழடி தொடங்கி பல வரலாற்று இடங்களில் நாம் மேற்கொள்கிற அகழாய்வுகளுக்கு ஒன்றிய பாஜக அரசு எப்படி எல்லாம் தடை போடுகிறது என்பதை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம். 

Advertisment

அவர்களுடைய எண்ணம் தமிழர்களுடைய வரலாற்று தொன்மையை நிரூபிக்க கூடிய ஆய்வுகள் எதுவும் நடக்கக் கூடாது. அப்படி மீறி நடந்தாலும் அந்த ஆய்வு முடிவுகள் வெளியிலே வந்து விடக்கூடாது. இப்படிப்பட்ட எண்ணம் கொண்ட தமிழ் மீதும் தமிழர் மீதும் வெறுப்போடு செயல்படுபவர்களை எதிர்த்து தான் உறுதியோடு நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். சரஸ்வதி நாகரிகத்தை தேடி அலைபுவர்களுக்கு கண் முன்னே நாம் வெளியிடுகிற ஆய்வுகள் தெரிவதில்லை. அதற்காக நாம் சோர்ந்து போய் விட முடியுமா... நம்முடைய கடமையில் இருந்து பின் வாங்கி விட முடியுமா... நம்முடைய வரலாற்றை விட்டுக் கொடுத்து விட முடியுமா... நிச்சயம் முடியாது. இது இரண்டாயிரம் காலமான சண்டை, நிச்சயம் நாம் தோற்றுவிட மாட்டோம். 

நாமும் அடுக்கடுக்கான சான்றுகளை வெளியே கொண்டு வருகிறோம். அது மட்டும் போதுமா? அறிவுத்தளத்தில் போராடிக் கொண்டிருந்தால் போதுமா? அதையெல்லாம் மக்கள் மன்றத்தில் கொண்டு வந்து இன்றைக்கு அந்தப் பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். அதற்காகத்தான் அருங்காட்சியகங்களை அமைத்துக் கொண்டு இருக்கிறோம்” என்றார்.

Advertisment