திருநெல்வேலியில் மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெரு விழா வெகு விமர்சையாக நடந்தது. இதில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சர்வமத தலைவர்கள் மகுடம் வழங்கி சிறப்பித்தார்கள். அவர்களுடன் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி முதல்வர் ஸ்டாலின் கொண்டாடினார்.
இதையடுத்து மேடையில் பேசிய அவர், “இந்த விழாவை ஒரு மதத்தின் விழாவாக இல்லாமல் மனிதநேய மகத்துவ விழாவாக கொண்டாடுகிற உங்களுக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துக்களும். எல்லாரும் ஒற்றுமையாக ஒருவரின் மீது ஒருவரோடு அன்பாக இருக்க வேண்டும் என்று நினைத்து தான் கடந்த 15 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ்ஸை ஒரு சமத்துவ விழாவாக இனிகோ இருதயராஜ் நடத்தி வருகிறார்.
தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி சார்பில் அமைக்கப்பட்டுள்ள சாரா டக்கர் கன்வென்ஷன் சென்டர் பிரதான நுழைவு வாயிலை திறந்து வைக்கக்கூடிய வாய்ப்பை பெற்றதற்காக பெருமை கொள்கிறேன். ஏனென்றால் தன்னுடைய வாழ்நாளில் இந்தியாவிற்கு வராமலே தன்னுடைய சகோதரி எழுதிய கடிதத்தின் மூலம் இங்கு நடந்த பிற்போக்குத்தனத்தை அறிந்து அதனைப் போக்க கல்வி எனும் அறிவை வழங்கிய மாற்றுத்திறனாளி பெண் தான் சாரா டக்கர். தென் தமிழ்நாட்டில் ஏராளமான பெண்கள் படித்து கல்வி அறிவை பெற அடித்தளமாக இருப்பது இந்த சாரா டக்கர் போன்ற கல்லூரிகள் தான்.
கிறிஸ்துமஸ் விழா என்பது தேவாலயத்தில் மட்டுமில்லாமல் தெருக்களில் வீதிகளில் பணியிடங்களில் கொண்டாடப்படக்கூடிய விழாவாக இருக்கிறது. அந்த விழா, நம்பிக்கை விதைக்கக்கூடிய விழாவாகவும் பரிவு காட்டும் விழாவாகவும் அமைதிக்கு வழிகாட்டும் விழாவாகவும் இருக்கிறது. அதனால் தான் மதங்களைக் கடந்து அனைத்து மக்களும் கிறிஸ்துமஸ் நாளில் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறார்கள். அன்பு நெறியை பண்பு நெறியாக வளர்த்து எடுப்பதுதான் கொண்டாட்டங்களுடைய அடிப்படையாக இருக்க வேண்டும். வெறுப்புணர்ச்சி என்பது பாவங்களைத் தான் செய்யத் தூண்டும். ஆனால் அன்பு என்பது அத்தனை பாவங்களையும் போக்கும். அப்படிப்பட்ட அமைதியான அன்பான சமுதாயத்தை, சகோதரத்துமிக்க் சமுதாயத்தை கட்டமைக்க வேண்டிய கடமை நம்முடைய எல்லாருடைய கடமையாக அமைந்திருக்கிறது. இதுதான் இன்றைய இந்தியாவிற்கு தேவை. இந்துக்களும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் ஒரு தாய் வீட்டு பிள்ளையாக இருக்க வேண்டும். அதற்கு இதுபோன்ற விழாக்கள் துணை நிற்க வேண்டும். திராவிட முன்னேற்ற கழகம் தான் சிறுபான்மையினருடைய நலன்களின் மீது அக்கறை கொண்டுள்ள இயக்கம்” என்றார்.
Follow Us