இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான நல்லகண்ணு (வயது 100) வீட்டில் இருந்தபோது கடந்த 22ஆம் தேதி (22.08.2025) கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து சிறப்பு மருத்துவர் குழு ஏற்படுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதன் காரணமாக அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு நல்லகண்ணு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இன்னும் ஓரிரு நாட்களில் அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/08/29/a5028-2025-08-29-12-53-10.jpg)
பல்வேறு அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். அண்மையில் நடிகர் சிவகார்த்திகேயன் நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்திருந்தார். இந்நிலையில் நாளை தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தற்போது சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சென்று நல்லகண்ணுவின் உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தார்.