கோவையில் தி.மு.க. மேற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு இன்று (27-02-26) பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “இந்த என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி பயிற்சி மாநாடுகளை, பிப்ரவரி 11-ஆம் தேதி திருவிடந்தையில் தொடங்கினோம். அடுத்து, திருப்பத்தூர், மதுரையை தொடர்ந்து கோவையில் நிறைவு செய்கிறோம். சுமார் ஏழு இலட்சம் வாக்குச்சாவடி குழுவினரை இப்படி சந்தித்திருக்கிறேன். இங்கு நான் வந்திருப்பது, உங்களை உற்சாகப்படுத்த மட்டுமல்ல. உங்களைப் பார்த்து, நானும் உற்சாகம் அடைவதற்கும், புத்துணர்வு பெறுவதற்கும் தான் வந்திருக்கிறேன். உங்கள் முகங்களைப் பார்க்கும்போது உங்களின் மகிழ்ச்சியும், எனர்ஜியும் எனக்கும் ட்ரான்ஸ்ஃபர் ஆகிறது. உங்கள் கான்ஃபிடன்ஸைப் பார்த்து, என்னுடைய கான்ஃபிடன்ஸ் லெவலும் அதிகமாகிறது.

Advertisment

இந்த மேற்கு மண்டலத்தில் 14 மாவட்டக் கழகங்கள் 39 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கிறது. இது எல்லாவற்றிலும் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்ற செய்திதான் ரிசல்ட் அன்றைக்கு ஃபிளாஷ் நியூஸாக வர வேண்டும். வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால், கடந்த சட்டமன்றத் தேர்தலில், இந்த மேற்கு மண்டலத்தை பொறுத்தவரைக்கும் நாம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அதை சரிசெய்து மாபெரும் வெற்றியை பெற்றுத் தர வேண்டிய கடமையும், பொறுப்பும் இங்கு மேடையில் இருப்பவர்களுக்கு இருக்கிறது. எதிரில் கூடியிருக்கும் உங்களுக்கும் இருக்கிறது. கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்த மண்டலத்தில் எப்படி பெரிய வெற்றியை பெற்றோமோ அதேபோல் பெரிய வெற்றியை சட்டமன்றத் தேர்தலிலும் உறுதி செய்ய வேண்டும். அந்த அளவிற்கு மேற்கு மண்டலத்திற்கு திட்டங்களை செய்து கொடுத்திருக்கிறோம்.

Advertisment

பரம்பரை பரம்பரையாக தி.மு.க.விற்கு வாக்களிக்கும் குடும்பமாக இருந்தாலும் சரி, இதுவரை நமக்கு வாக்களிக்காத குடும்பமாக இருந்தாலும் சரி, பிரசாரத்தின் கடைசி நிமிடம் வரை மக்களை நாம் சந்தித்துக்கொண்டே இருக்க வேண்டும். சாதனைகளைச் சொல்லி, வாக்குறுதிகளைச் சொல்லி, வாக்கு கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இதை நீங்கள் ரிப்பீட் மோடில் செய்ய வேண்டும்! அப்போதுதான் நம்முடைய வெற்றியும் ‘ரிப்பீட்’ ஆகும்! தேர்தல் அன்றைக்கு பூத்திற்கு வந்து வாக்காளர்கள் நமக்கு வாக்களிக்கும் வரை, ஓய்வே இருக்க கூடாது. வீடுவீடாகச் சென்று பணிவாக, கனிவாக, மரியாதையாக, நட்பாக அணுக வேண்டும். ஏனென்றால், என்றைக்குமே மக்கள்தான் எஜமானர்கள், நாம் அவர்களின் சேவகர்கள். மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு, அவர்களின் இன்ப துன்பங்களில் கூடவே நிற்பதால்தான், தேர்தலில் அவர்களும் நம்முடன் நிற்கிறார்கள். 75 ஆண்டுகளாக திமுக வலிமையாக இருப்பதன் இரகசியம் இதுதான்! நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், இந்தியாவிலேயே எந்த மாநில அரசும் செய்யாத அளவிற்கு ஏராளமான சாதனை திட்டங்களை செய்து கொண்டிருக்கிறோம்.

அதனால், நம்பிக்கையுடன் பிரச்சாரம் செய்யுங்கள். அடுத்த இரண்டு மாதத்திற்கு எந்தப் பக்கம் திரும்பினாலும், எந்த வீட்டுக்குள் நுழைந்தாலும் அங்கு, தி.மு.க.வும் உதயசூரியனும்தான் இருக்க வேண்டும். தெருமுனைக் கூட்டங்கள், திண்ணைப் பிரச்சாரங்கள், சமூக வலைதள பிரச்சாரங்கள் என்று அனைத்திலும் நாம்தான் முத்திரை பதிக்க வேண்டும். எல்லாருக்கும் எல்லாம் என்பதை வெறும் வாய் வார்த்தைகளில் சொல்லாமல், ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் என்ன தேவை என்பதையும் உன்னிப்பாக பார்த்துப் பார்த்துத் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம். வளர்ச்சி என்றாலே பிடிக்காத ஒரு கட்சியாக பா.ஜ.க. இருக்கிறது. மக்கள் அவர்களை தொடர்ந்து புறக்கணிக்கிறார்கள். அதனால், அ.தி.மு.க.வை தன்னுடைய கிளைக் கழகமாக மாற்றி அதில் முன்னேறி வரலாமா என்று நினைக்கிறது பா.ஜ.க. பிரதமர் மோடி திடீர் என்று ஜெயலலிதா புகழ் பாட ஆரம்பித்திருக்கிறார். எந்த அம்மையார் ஜெயலலிதாவை புகழுகிறார்? ‘குஜராத் மோடியா? இந்த லேடியா?’ என்று சவால்விட்ட ஜெயலலிதா மீது திடீர் பாசம் இன்றைக்கு மோடிக்கு வந்திருக்கிறது. பிரதமர் மோடி அவர்களே… ஜெயலலிதா விட்ட சவால் உங்களுக்கு மறந்துவிட்டதா? இல்லை, ‘இந்தியாவிலேயே அ.தி.மு.க. அரசாங்கம்தான் ஊழல் அதிகமாக நடக்கும் அரசாங்கம்’ என்று உங்களின் நம்பர் 2 அமித் ஷா பேசினாரே அதை மறந்துவிட்டீர்களா? நீங்கள் மறந்திருக்கலாம். ஆனால், இது எதையுமே தமிழ்நாட்டு மக்கள் மறக்கவில்லை.

Advertisment

mkco

இதையெல்லாம், மறந்துவிட்டு அல்ல, மறைத்துவிட்டு பிரதமர் பேசுவது எதற்காக என்றால், ஒன்றிய பா.ஜ.க.வின் 12 ஆண்டுகால ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு என்று எதுவுமே செய்யவில்லை. சொல்லிக் கொள்ள சொந்தமாக சாதனைகள் இல்லாததால், ஜெயலலிதாவின் புகழ் பாடினால் வாக்குகள் வருமா என்று பார்க்கிறார். தேர்தல் வந்துவிட்டதே என்றுகூட தமிழ்நாட்டிற்கு என்று எந்தச் சிறப்பு திட்டத்தையும் பட்ஜெட்டில் அறிவிக்க மனம் இல்லாத உங்களின் நடிப்பை தமிழ்நாட்டு மக்கள் நிச்சயமாக நம்ப மாட்டார்கள். பிரதமர் மோடி அவர்களே... தமிழ்நாடு உங்களிடம் கேட்பது என்ன தெரியுமா? தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவை மெட்ரோவிற்கு ஏன் அனுமதி தரவில்லை? கோயில் நகரமான மதுரை மெட்ரோவிற்கு அனுமதி கொடுத்துவிட்டீர்களா? திருச்சி மெட்ரோவிற்கு அனுமதி வழங்க எது தடுக்கிறது? கேபினட் மீட்டிங்கில் அகமதாபாத் மெட்ரோவிற்கு அனுமதி கொடுத்த நீங்கள், தமிழ்நாடு மெட்ரோ திட்டத்திற்கு ஏன் அனுமதி தர மறுக்கிறீர்கள்? இது உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா? எங்களின் கோரிக்கைகளையும், தமிழ்நாட்டிற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்து கொண்டிருக்கும் துரோகங்களையும், ஓரவஞ்சனைகளையும் நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டு இருக்கிறேன். அதற்கெல்லாம் உங்கள் பதில் என்ன?

ஓசூர் விமான நிலையத்திற்கு அனுமதி எங்கே? சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான முழுமையான நிதியை எப்போது தருவீர்கள்? பள்ளிக் குழந்தைகளுக்கு சேர வேண்டிய 3 ஆயிரத்தி 500 கோடி ரூபாய் S.S.A. நிதியை தராமல் ஏன் இழுத்தடிப்பதற்கு என்ன காரணம்? ஜல்ஜீவன் இயக்கத்திற்கான மானியத்தை 3 ஆயிரத்தி 548 கோடி ரூபாயை எப்போது தருவீர்கள்? ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தர வேண்டிய 2 ஆயிரத்தி 246 கோடி ரூபாயை எப்போது தருவீர்கள்? ஒன்றிய அரசு திட்டங்களுக்கு தர வேண்டிய நிதியைக் கூட ஏன் தராமல் நிறுத்தி வைத்திருக்கிறீர்கள்? ஜி.எஸ்.டி.யால் தமிழ்நாட்டிற்கு இந்த ஆண்டு 9 ஆயிரத்தி 600 கோடி ரூபாய் இழப்பு ஏற்படப் போகிறதே, இது அநியாயம் இல்லையா? ரிசர்வ் பேங்கில் தமிழ்நாடு அக்கவுண்டில் இருந்த ஆயிரத்தி 709 கோடி ரூபாயை ஒன்றிய அரசு பிடித்தம் செய்தது சரியா? தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திற்கு 16 ஆயிரத்தி 290 கோடி ரூபாய் இழப்பீட்டு நிதி வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து, கூடுதல் சுமையை ஏற்றியது சரியா? இதையெல்லாம் செயற்கையான நிதி நெருக்கடி என்று சொல்லாமல், வேறு என்ன என்று சொல்வது? தமிழ்நாட்டின் மீது வன்மத்தோடு இப்படிப்பட்ட அநியாயங்களை செய்யும் பா.ஜ.க.வோடுதான் கூட்டணி வைத்துக் கொண்டு மாபெரும் துரோகியாக இன்றைக்கு உருவெடுத்திருக்கிறார் எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி” என்று பேசினார்.