திருப்பத்தூரில் திமுக வடக்கு மண்டல பூத் ஏஜென்ட் பயிற்சி மாநாடு இன்று (14-02-26) மாலை நடைபெற்றது. இதற்காக சென்னையில் இருந்து ரயில் மூலம் ஜோலார்பேட்டை சென்ற முதல்வருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டார். இதையடுத்து மாநாட்டு மேடைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் பேசுவதற்கு துணிவில்லாமல், முதுகெலும்பு இல்லாமல் கொத்தடிமை சேவகம் செய்து இருக்கக்கூடிய பழனிசாமி எனக்கு சவால் விட்டிருக்கிறார். ஒரு அரசியல்வாதி எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு அடையாளமாக சோசியல் மீடியாவில் வளம் வந்துட்டு இருக்கிறார் பழனிசாமி. மாண்புமிகு பழனிசாமி அவர்களே, தவழ்ந்து தவழ்ந்து ஊழல் குற்றவாளியான சசிகலா காலில் விழுந்து பதவியை பெற்று அவர் காலை வாரிவிட்டுவிட்டு நீ எனக்கு பதவி கொடுத்தியா? மரியாதை இல்லாமல் ஒருமையில் கேட்டீங்களே இல்லையென்று மறுக்க முடியுமா? சட்டம் ஒழுங்கு பற்றி பேசுவதற்கு உங்களுக்கு தார்மீக உரிமையாவது இருக்கிறதா? உங்க கட்சியினுடைய உண்மையான பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை, அதை தொடர்ந்து மர்ம மரணங்கள் இதை எல்லாம் மறக்கடித்துவிட்டதாக நினைத்து கொண்டிருக்கிறீர்களா? பொல்லாத ஆட்சிதான் பழனிசாமி ஆட்சி என்பதற்கு பொள்ளாட்சியே சாட்சியாக ஆதாரம் வலுவாக இருக்கிறது.
ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்று அமைதியாக ஊர்வலம் போன அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சொல்லிவிட்டு டிவியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என நாடகம் போட்டதை மக்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறீர்களா?. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அப்பாவும் மகனும் அடித்து கொல்லப்பட்டபோது அவர்கள் உடல்நலம் இல்லாமல் இறந்ததாக கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல் சொன்னீர்களே. உங்களுடைய அந்த கல் மனதை மக்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறீர்களா. ஊழலின் ஊற்று கண்ணான அதிமுகவுடைய பாரம்பரியத்தை காப்பாற்ற உறவினர்களுக்கு டெண்டர்களை அள்ளி கொடுத்துவிட்டு வழக்கு வந்த உடனே, தமிழ்நாடு முழுக்க எனக்கு சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள் என்று சப்பைக்கட்டு கட்டுனீர்களே மக்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறீர்களா? உங்கள் மேல் ஊழல் வழக்கு இருக்கா என்று கேட்டப்போது யார் மேல் தான் ஊழல் வழக்கு இல்லை என்று அசரவைக்கிற அளவுக்கு பதில் சொன்னீர்களே உங்கள் டேலண்டை என்னவென்று சொல்வது? மூன்று வேளாண் சட்டங்களை மனசாட்சி இல்லாமல் ஆதரித்து விவசாயிகள் மீதே அவதூறு பரப்புனீர்களே. பச்சை துண்டு போட்டு பச்சை துரோகி பழனிசாமி என்று சொல்லி உங்களை புறக்கணித்த விவசாயிகள் அதை மறந்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?
இப்படி ஏராளமான கேள்விகள் இருக்கிறது. இதுக்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லாமல் தவிர்த்தாலும் மக்களுக்கு பதில் தெரியும், உங்க லட்சணமும் புரியும். எனவே திமுக அரசை அவதூறு பரப்பி கலங்கப்படுத்த நினைக்கிற உங்களுடைய பேச்சுக்களை மக்கள் நம்ப மாட்டார்கள், நம் திராவிட மாடல் அரசு, சாதனைஅரசாக இருக்கிற காரணத்தினால் பழனிசாமி இவ்வளவு வேதனையோடு புலம்புவதற்கு காரணம் இது தான். ஆயிரம் ஆண்டுகள் நின்று பேசுகிற சாதனைகளை ஐந்து ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறோம். யூடியூபிலும், சோசியல் மீடியாக்களிலும் பாருங்கள். வடமாநில சேனல்கள் எல்லாம், இப்படி சாதனைகள் செய்க்ககூடிய அரசு இந்தியாவிலேயே இல்லை என்று நம் திராவிட மாடல் அரசை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். நாம் போராடுவது திமுகவின் வெற்றிக்காக மட்டுமல்ல, தமிழ்நாட்டுடைய வெற்றிக்காக. பா.ஜ.கவுடைய டப்பா என்ஜின் முன்னாடி நம்முடைய திராவிட மாடல் சூப்பர் பாஸ்ட் என்ஜின் ஒருபோதும் தலைகுணியாது. மக்களை சந்திக்கும் போது நம்முடைய சாதனைகளை சொன்னால் மட்டும் போதாது. ஒன்றிய பா.ஜ.க அரசின் துரோகங்களை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும். டப்பா ஏறி கொத்தடிமைகள் மூலமாக தமிழ்நாட்டுக்குள் புறவாசல் வழியாக நுழைய நினைக்கிற பா.ஜ.கவின் எண்ணத்தை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழ்நாட்டுக்கு பரப்புரைக்கு வரும் பிரதமர், தமிழ்நாட்டுக்கென்று இந்த சாதனைகள் எல்லாம் செய்திருக்கிறோம் என்று சொல்கிறாரா?. இருந்தால் தானே சொல்ல முடியும்.
ஒன்றிய அரசினுடைய பட்ஜெட் வெளியிட்டார்கள். அதில் தமிழ்நாட்டுக்கு ஏதாவது சிறப்பு திட்டங்கள் அறிவித்தார்களா? இதை தட்டி கேட்கிற துணிச்சலோ, தைரியமோ பழனிசாமிக்கு இருக்கிறதா?அவரை பொறுத்தவரைக்கும் ஸ்டாப் சொல்கிற வரைக்கும் நான் ஸ்டாப்பாக பெல்டி அடிப்பார். எல்லா துரோகத்தையும் செய்துவிட்டு கூட்டணி தர்மத்துக்காக தான் தமிழ்நாடு உரிமைகளை அடகு வைத்தேன் என்று கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் சொல்வார். இதையெல்லாம் நல்லா உணர்ந்து தான் அவருடைய தலைமையை அவருடைய கூட்டணி ஏற்றுக்கொள்ளவில்லை. எல்லோரும் ஒரிஜினல் ஓனராக பா.ஜ.கவிடம் நேரடியாக சரண்டர் ஆகிறார்கள். அதிமுக என்பது பா.ஜ.க டிராவல் பண்ணுவதற்கு யூஸ் பண்ணிக்கிற ஒரு கிளை அமைப்பு என்று மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். தமிழ்நாடு என்ற பெயரை மாற்ற வேண்டும் என்று துடிப்பவர்கள் தமிழ்நாட்டுக்குள் வந்தால் அவர்கள் சதி திட்டங்கள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். இந்த சதியை உணராமல் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தவிர வேறு யாருக்கும் வாக்களித்தாலும் இன்றைக்கு நாம் செய்திருக்கும் அத்தனை நலத் திட்டங்களை நிறுத்திவிடுவார்கள் என்று மகக்ளுக்கு நீங்கள் புரிய வைக்க வேண்டும்” என்று பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/14/mkstalindmlk-2026-02-14-21-51-27.jpg)