வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவதை இலக்காகக் கொண்டு, வாக்குச்சாவடி அளவில் திமுகவைப் பலப்படுத்த வாக்குச்சாவடி முகவர்கள் மண்டல பயிற்சி மாநாடுகளை திமுக நடத்தி வருகிறது. அதன்படி கடந்த 11ஆம் தேதி திருவடந்தையிலும், 14ஆம் தேதி திருப்பத்தூரிலும் மண்டல வாரியாக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு நடைபெற்று வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களுக்கு தேர்தல் களப்பணி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த இரு மாநாட்டிலும் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் பேசினார்.
இந்த நிலையில், மதுரை உத்தங்குடியில் திமுக தெற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு இன்று (21-02-26) நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள கூட்டத் திடலுக்கு வருகை தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கண்டவுடன் தொண்டர்கள் தங்களது கட்சித் துண்டை சுழற்றியபடி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். அதன் பின் மேடைக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு வைக்கப்பட்டிருந்த பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், அன்பழகன் ஆகியோரின் புகைப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர், இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “அண்மையில் பிரதமர் மோடி பேசிய பழைய வீடியோ மறுபடியும் வைரல் ஆனது. அதில் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில்களில் பயணிகளுடைய எண்ணிக்கை குறைவதாக சொல்லி இருக்கிறார். தமிழ்நாட்டில் நம் திராவிட மாடல் ஆட்சி அமைந்த நாளில் இருந்து பெண்கள் விடியல் பயணம் திட்டத்தில் இலவசமாக பயணிக்கிறார்கள். இதனால் ஒவ்வொரு குடும்பமும் மாதத்தில் சுமார் ரூ.800 சேமிக்கிறார்கள். இதெல்லாம் ஏன் சார் உங்களுக்கு வலிக்குது? மார்ச் 1ஆம் தேதி இதே மதுரைக்கு பிரதமர் வரப்போகிறார். இவ்வளவு அக்கறையோடு மெட்ரோ ரயிலுக்கு பேசுபவர், ஏன் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை கொடுக்கவில்லை என்று மதுரை மக்கள் கேட்க வேண்டும். ஏன் தமிழ்நாட்டுக்கு எந்த சிறப்பு திட்டங்களையும் கொடுக்கவில்லை என்று கேட்க வேண்டும். கீழடி அறிக்கையை ஏன் வெளியிடவில்லை, ஏன் நீட் தேர்வில் இருந்து விலக்கு தர மறுக்கிறீர்கள், மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கல்வியில் சிறந்த தமிழ்நாட்டை வஞ்சிக்க எங்களுக்கான கல்வி நிதியை முடக்குவது நியாயமா என்று கேட்க வேண்டும். பிரதமர் அவர்களே, இன்னும் நிறைய இருக்கு, அதையெல்லாம் மக்கள் கேட்க காத்திருக்கிறார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டுடைய உரிமைகளுக்காக குரல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், கோரிக்கையாக கூட இதையெல்லாம் கேட்க துணிச்சல் இல்லாத துரோகியாக அவர் மாறிவிட்டார். ஆனால், நாம் பழனிசாமி மாதிரி பயந்தாங்கொள்ளி இல்லை. ஆட்சி, பதவி என உயிரே போனாலும் எதைபற்றியும் நாங்கள் கவலைப்பட மாட்டோம். என்ன வழக்கு போடுவார்கள், போடு? நாங்கள் பார்க்காத மிசாவா? நாங்கள் பார்க்காத தடாவா? இந்திய அளவில் இருக்கக்கூடிய எதிர்க்கட்சிகளில் திமுக மேல் தான் பா.ஜ.க அரசு அதிகமான ரெய்டுகளை நடத்துகிறார்கள். நம் அமைச்சர்களுக்கு தான் அதிகளவில் அழுத்தம் கொடுக்கிறார்கள். ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்தலாம் என்று பார்க்கிறார்கள். எமர்ஜென்சியை பார்த்த திமுக, உங்களுடைய இந்த சிபிஐ, ஈடி, ஐடி என எந்த சித்து விளையாட்டுக்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம். அதற்கு வேற ஆள பாருங்கள். என்ன ஆனாலும் சரி, நாங்கள் எழுந்து நிற்போம், ஒரு கை பார்ப்போம். தமிழ்நாட்டுடைய உரிமைகளுக்காக இப்படி தைரியமாக போராடுகிற காரணத்தினால் தான் மக்கள் நம் கூட ஆதரவாக இருக்கிறார்கள். அதனால் தான் சந்திக்கிற எல்லா தேர்தல்களிலும் நாம் ஜெயித்துக் கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என்ற கேள்வியை மக்கள் முன் எழுப்ப வேண்டும். தமிழ்நாடு ஜெயிக்கணும் என்றால், திராவிட முன்னேற்ற கழகம் ஜெயிக்கணும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஜெயிக்கணும். அடிமை அதிமுகவும், பாஜகவும் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க வேண்டும். உங்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பை ஏற்க வேண்டும். தமிழ்நாடு எல்லா துறைகளும் தொடர்ந்து நம்பர் ஒன்னாக இருக்க வேண்டும். இது நான் தரும் வாக்குறுதி. அதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என்ற இந்த போரில் தமிழ்நாடு வெல்வோம் என்று ஒன்றாக, இந்தி திணிப்பை எதிர்க்க வெல்வோம் ஒன்றாக, மாநில சுயாட்சி நிலைநாட்டிட வெல்வோம் ஒன்றாக, மக்கள் நல திட்டங்களை தொடர்ந்திட வெல்வோம் ஒன்றாக, தமிழ்நாடு எப்பொழுதும் அமைதியான மாநிலமாக இருக்க வெல்வோம் ஒன்றாக, தமிழ்நாட்டை வளர்ச்சி பயணம் தொடர வெல்வோம் ஒன்றாக, எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வெல்வோம் ஒன்றாக, தமிழர் சுயமரியாதை காத்திட வெல்வோம் ஒன்றாக, தமிழ்நாடு தலை குணியாது என்று காட்டிட வெல்வோம் ஒன்றாக... பாசிச பாஜகவை விரட்டிட வெல்வோம் ஒன்றாக, அடிமை அதிமுகவுக்கு பாடம் கற்பிக்க வெல்வோம் ஒன்றாக, தமிழ்நாடு இந்தியாவுக்கே வழிகாட்டிட வெல்வோம் ஒன்றாக...” என்று பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/21/mkstalindmk-2026-02-21-20-14-38.jpg)