Advertisment

“ஜென்-சீ தலைமுறைக்கும் எடுத்து செல்ல வேண்டும்” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

15 (41)

தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை போன்ற இடங்களில் அகழாய்வுகள் நடத்திய நிலையில் அங்கு கிடைத்த பழங்கால பொருட்களை நெல்லை ரெட்டியார்பட்டியில் பொருநை அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த அருங்காட்சியகத்தை நாளை(21-12-25)  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதற்காக இரண்டு நாள் அரசு முறை பயணமாக முதல்வர் ஸ்டாலின் திருநெல்வேலி சென்றுள்ளார்.  

Advertisment

இந்த நிலையில் பொருநை அருங்காட்சியகம் சிறப்புகள் குறித்து முதல்வர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசுகையில், “எல்லோருக்கும் என்னுடைய அன்பான தமிழ் வணக்கம் ! தமிழ்நாட்டின் முதலமைச்சராக, உங்கள் எல்லோரையும் திருநெல்வேலி நோக்கி அழைக்க தான் இந்த வீடியோ! வரலாற்றை தெரிந்து கொள்வதும் மீட்டெடுப்பதும் எதற்காக? வெறும், பழம்பெருமையை பேசி, அதில் மனநிறைவு அடைவதற்காகவா? இல்லை! நாம் வந்த பாதையை தெரிந்து கொண்டு, எதிர்காலத்தில் இன்னும் முற்போக்காக, இன்னும் பரந்த மனப்பான்மையோடு வளர்வதற்கான தேடல் அது!

Advertisment

இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு. தமிழ்நிலப்பரப்பில் இருந்து தான் எழுதப்பட வேண்டும் என்று தொடர்ந்து நான் சொல்லி கொண்டு வருகிறேன். இது ஏதோ தற்பெருமைக்காகவோ, மேடை அலங்காரத்துக்காகவோ பேசிய வெற்றுப் பேச்சு இல்லை. அறிவியல்பூர்வமான உண்மை இது - என்று நம் திராவிட மாடல் அரசு தொடர்ந்து மெய்ப்பித்து வருகிறோம். மதுரைக்கு பக்கத்தில் கீழடி அகழ்வாய்வு கண்டுபிடிப்புகளைக் கொண்டு கீழடி அருங்காட்சியகத்தை மிகவும் கம்பீரமாக உருவாக்கி இருக்கிறோம். அடுத்ததாக, இப்போது திருநெல்வேலியில் பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறேன்.

பொருநை ஆற்றங்கரை நாகரிகத்தில் நுண் கற்கருவிக் காலம் தொடங்கி, இரும்புக் காலம், தொடக்க வரலாற்று காலம் என்று தொடர்ச்சியாக வரலாற்றுத் தடயங்கள் பொருநை ஆற்றங்கரைப் பகுதிகளில் ஏராளமாக கிடைக்கிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் சங்ககாலத் துறைமுக நகரமான கொற்கையை பற்றி, சங்க இலக்கியங்களில் முழுமையாக பார்க்கலாம். 'தாலமி', 'பிளினி' போன்ற அயல் நாட்டவர்களும் இதுபற்றி நிறையவே எழுதி இருக்கிறார்கள். கொற்கையில் கிடைக்கக்கூடிய முத்துக்களைப் பற்றி சிறப்பாக குறிப்பிடுகிறார்கள். அதேபோல ஆதிச்சநல்லூர், சிவகளை போன்ற இடங்களில், இரும்புக் காலத்தைச் சார்ந்த புதைப்பிடப் பகுதிகளும், மக்கள் வாழ்விடப் பகுதிகளும் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூலை உலகுக்கு கொடையாக கொடுத்த ராபர்ட் கால்டுவெல், 1876ஆம் ஆண்டிலேயே கொற்கையை ஆய்வு செய்ததோடு, சிறிய அளவிலே அகழாய்வும் செய்தார். அதேபோல், ஜாகர் அலெக்ஸாண்ட்ரே 100 ஆண்டுகளுக்கு முன்பே ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்திருக்கிறார். தமிழர் பண்பாட்டின் தொன்மையையும் சிறப்பையும் உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் முயற்சியில் நம் அரசு முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. பொருநை ஆற்றங்கரையின் முக்கியமான இடங்களில் தமிழ்நாடு தொல்லியல் துறை விரிவாக நடத்திய அகழாய்வுகளில், ஏராளமான சான்றுகள் வெளியே கொண்டுவரப்பட்டு இருக்கிறது. 

ஆதிச்சநல்லூர், சிவகளையில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் வெண்கலம், தங்கம், செம்பு, இரும்பு என்று பல்வேறு உலோகங்களால் செய்யப்பட்ட தொல்பொருட்கள் வெளிக்கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இதில் குறிப்பாக, இரும்பை உருக்கி கருவிகளை செய்யும் தொழில்நுட்பம் தமிழ்நாட்டில்தான் சிறப்பாக இருந்திருக்கிறது. தொல்லியல் அகழாய்வுகளில் இதுவரை கிடைத்த இரும்பு பொருட்களிலேயே, காலத்தால் முந்தைய இரும்பு சிவகளையில் கிடைத்த இரும்புதான் என்பதும் அறிவியல் அடிப்படையிலான காலக்கணிப்பு முடிவுகள் மூலமாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. உலகின் தலைசிறந்த அறிஞர்கள் முன்னிலையில் இந்த அறிவிப்பை ஜனவரி 2025-ல் நான் உலகுக்கு வெளியிட்டேன்.

பொருநை ஆற்றங்கரை அகழாய்வுகளில் கிடைத்த தொல் பொருட்கள் இந்த பகுதியிலேயே அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்தப்படும் என்று அறிவித்து, அந்தப் பணிகள் நிறைவடைந்து இப்போது பிரமாண்டமாக உருவாகியிருக்கிறது. மின் விளக்குகளின் அலங்காரத்தில் ஜொலிக்கின்ற பொருநை அருங்காட்சியகத்தின் டிரோன் காட்சிகளை உங்களில் பலர் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

2023ஆம் ஆண்டு மார்சில் நான் திறந்து வைத்த கீழடி அருங்காட்சியகத்தை, 2025 நவம்பர் வரை, 12 லட்சத்து 50 ஆயிரம் பேர் உலகெங்கும் இருந்து வந்து பார்த்திருக்கிறார்கள். நேரில் வர முடியாதவர்களும் இருந்த இடத்திலிருந்தே, இணையவழி மூலமாக கீழடி அருங்காட்சியகத்தை விர்ச்சுவலாக சுத்திப் பார்க்க மெய்நிகர் இணையவழி சுற்றுலாவை உருவாக்கி கொடுத்திருக்கிறோம். இப்போது பொருநை அருங்காட்சியமும் 55 ஆயிரம் சதுர அடியில் மரபார்ந்த வடிவமைப்போடு, அதே நேரத்தில் அதிநவீன தொழில்நுட்பங்களோடு உருவாக்கப்பட்டிருக்கிறது. 

டிஜிட்டல் முறையில் உருவகப்படுத்தப்பட்ட இரும்பு உருக்கு செயல்முறை, 5-டி முறையில் தமிழ் நிலங்களின் வழியாக உணர்வுப் பயணம், பாண்டி விளையாட்டு தரை ஒளிபடக் காட்சி, தொல்லியல் வரலாற்றுப் பின்புலம் குறித்த டாக்குமெண்டரி படம், மெய்நிகர் படகு அனுபவ உருவகம், ஆற்றுப் பள்ளத்தாக்கு நாகரிகங்களின் தொடுதிரை காட்சி, கருவிகளை உருவாக்கும் ஊடாடு சுவர்... அதாவது இண்டராக்டிவ் வால், டிஜிட்டல் பீட்பேக் மையம். பொருநையின் குரல் பயணம் போன்ற ஏராளமான நவீன தொழில்நுட்ப அனுபவங்கள் இங்கே நீங்கள் பெறலாம். 

தமிழர்களின் தொன்மையை, தமிழர்களின் நாகரிக மேன்மையை இந்த தலைமுறையினருக்கு மட்டுமல்ல. ஜென்-சீ உள்ளிட்ட அடுத்தடுத்த தலைமுறைக்கும் எடுத்து கொண்டு போக வேண்டும் என்று பார்த்து பார்த்து இவ்வளவும் செய்திருக்கிறோம். என்னுடைய இந்த எண்ணம் ஈடேற நீங்கள் எல்லோரும் உங்கள் குடும்பங்களோடு கீழடி அருங்காட்சியகத்தையும், பொருநை அருங்காட்சியத்திற்கும் அணி அணியாக வர வேண்டும் என்று அன்போடு, உரிமையோடு அழைக்கிறேன். நம்முடைய பெருமையையும் வரலாற்றையும் நாம் முதலில் தெரிந்து கொண்டால் தான், உலகத்திற்கு அதை எடுத்துச் சொல்ல முடியும். அதற்கான நம் அரசின் முயற்சிக்கு உங்கள் ஆதரவு வேண்டும். கீழடி, நம் தாய்மடி... பொருநை, தமிழரின் பெருமை... என்று உரக்கச் சொல்வோம்” என்றார். 

mk stalin Museum Tirunelveli
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe