தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞரின் மூத்த மகனும், நடிகருமான மு.க.முத்து (77) வயது மூப்பு காரணமாக இன்று (19-07-25) காலமானார். இவர் கலைஞர்-பத்மாவதி தம்பதிக்கு மூத்த மகனாக 1948 ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி பிறந்தார். பின்பு நடிகராக அணையா விளக்கு, பூக்காரி, பிள்ளையோ பிள்ளை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமின்றி பாடகராகவும் வலம் வந்துள்ளார். 

Advertisment

இந்த நிலையில், இன்று அவர் வயது மூப்பு காரணமாக மறைந்துள்ளார். இதனால் கலைஞர் குடும்பத்தைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  மு.க.முத்து மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டது. அங்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு ஆகியோர் சென்று அஞ்சலி செலுத்தினர். மு.க.முத்துவின் உடலை கலைஞர் வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்க வேண்டும் என மு.க.முத்துவின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்த நிலையில் அவரது உடல் கோபாலபுரம் இல்லத்திற்கு மாற்றப்பட்டது. அங்கும் அவரது உடலுக்கு அரசியல் கட்சியினர், பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வந்தனர்.

அதனை தொடர்ந்து கோபாலபுரம் இல்லத்தில் இருந்து இறுதி ஊர்வலம் செல்லப்பட்டு, பெசண்ட் நகர் மின்மயானத்தில் மு.க.முத்துவின் உடல் தகனம் செய்யப்பட்டது. அண்ணன் மு.க.முத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரியாவிடை கொடுத்தார். இந்த இறுதிச் சடங்கில் அவரது குடும்பத்தினர், தமிழக அமைச்சர்கள் பங்கேற்றனர்.