தி கேரள ஸ்டோரி திரைப்படத்தின் இரண்டாம் பாகமான தி கேரள ஸ்டோரி 2: கோஸ் பியோண்ட் (The Kerala Story 2: Goes Beyond) வரும் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் கடந்த 17ஆம் தேதி வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இந்தப் படம் சமூக நல்லிணக்கத்தைக் சீர்குலைக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி இதற்குத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். 

Advertisment

இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு. தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரைப்படத்தின் மூலம் நல்லிணக்கத்தை கெடுக்க முயலும் எந்த முயற்சியையும் ஜனநாயக வழியில் தடுத்து நிறுத்துவோம். தி கேரள ஸ்டோரி - 2  என்ற திரைப்படத்தில் சமூக நல்லிணக்கத்தையும், பொது அமைதியும் கெடுக்கும் காட்சிகளும் வசனங்களும் உள்ளதாக தெரிய வருகிறது. கேரள முதல்வர்  பினராயி  விஜயனும் தன் கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார். இதனை தமிழ்நாட்டில் திரையிடுவதை தவிர்க்குமாறு திரையரங்க உரிமையாளர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

Advertisment

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் உண்மைக்கு மாறாக  திரிபு வாதத்தை விதைக்க நினைப்பதும், அதன் மூலம் கலவரங்களை தூண்ட நினைப்பதும் ஏற்புடையதல்ல. கலவரங்களை ஏற்படுத்துவதற்கு பெயர் திரைப்படம் என்றால், அதனை எதிர்ப்பது ஜனநாயக சக்திகளின் கடமையாகும். இதனை மீறி திரை அரங்குகளில்  இப்படத்தை திரையிட  முயன்றால், ஜனநாயக சக்திகளை திரட்டி திரையரங்குகளை முற்றுகையிடும்  போராட்டத்தை நடத்துவோம். அனைத்து சமூகத்தவரின் ஒற்றுமையும், பொது அமைதியுமே எங்களுக்கு முக்கியம். அதை கெடுக்க முயலும் எந்த முயற்சிகளையும் ஜனநாயக வழியில் தடுத்து நிறுத்துவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.