காணாமல் போன மூத்த பத்திரிகையாளர் ஒருவர், மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் மூத்த பத்திரிகையாளர் ராஜீவ் பிரதாப். இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முன்னாள் மாணவரான இவர், டெல்லி உத்தரகாண்ட் லைவ் என்ற டிஜிட்டல் செய்தி தளத்தை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி இரவு முதல் ராஜீவ் பிரதாப் காணாமல் போயுள்ளார். இது குறித்து போலீஸுக்கு புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், அவரை தீவிரமாக தேடி வந்தனர்.
ராஜீவ் பிரதாப் காணாமல் போன ஒரு நாளுக்குப் பிறகு செப்டம்பர் 19ஆம் தேதி, அவருடைய கார் பாகீரதி ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்டது. காணாமல் போன ராஜீவ் பிரதாப்பை தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்று (28-09-25) உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள ஜோஷியாடா ஏரியில் இருந்து ராஜீவ் பிரதாப்பின் உடல் கண்டுடெடுக்கப்பட்டது. 1 வாரத்திற்கும் மேலாக காணாமல் போனதாக கருதப்பட்ட மூத்த பத்திரிகையாளர் ராஜீவ் பிரதாப், மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜீவ் பிரதாப்பின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் காணாமல் போனதில் இருந்து தவறு நடந்திருப்பதாகவும் ராஜீவ் பிரதாப்பின் குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர். இதற்கிடையில், பத்திரிகையாளர் ராஜீவ் மரணம் குறித்து அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் வருத்தம் தெரிவித்ததோடு, இந்த வழக்கில் முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்படி, இந்த சம்பவம் குறித்து அம்மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.