திருவள்ளூர் மாவட்டம் ஆரப்பாக்கத்தில் கடந்த 12ஆம் தேதி (12.07.2025) சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட நபரைப் பிடிக்க 20 தனிப்படைகள் அமைக்கப்பட்டுக் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். சுமார் 13 நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு நேற்று (25.07.2025) மாலை 4 மணி அளவில் ஆந்திர மாநிலத்தில் உள்ள சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் வைத்து குற்றவாளி கைது செய்யப்பட்டார். இவர் மீது போச்சோ, குழந்தையைக் கடத்துதல், கடுமையான ஆயுதங்களை வைத்துத் தாக்குதல் மிரட்டுதல் மற்றும் உடலுக்குத் தீங்கு விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து கவரப்பேட்டைக் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளியிடம் 15 மணிநேரத்திற்கும் மேலாக அவரிடம் தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின் போது அவர் தனது அடையாளத்தை மாற்றி மாற்றிச் சொல்வதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இவர் தொடர்ச்சியாக ரயிலில் பயணிக்கக்கூடிய வழக்கம் உடையவராக உள்ளார். அதன் அடிப்படையில் தான் நேற்று கைது செய்யப்பட்டார். அதோடு இவர் தொடர்ச்சியாகச் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில்களில் பயணித்து பல்வேறு இடங்களுக்குப் பயணிக்கக்கூடியவராக உள்ளார். அதே சமயம் ஆந்திர மாநிலத்தில் உள்ள தாபா ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இவர் தாபாவின் பணி நேரம் முடிந்த பின் மின்சார ரயில் மூலம் பல்வேறு இடங்களுக்குப் பயணிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்த குற்றம் நடந்த சம்பவ நிகழ்ந்த இடத்திலிருந்து தொடர்ச்சியாக 75 சி.சி.டி.வி. கேமராக்களின் காட்சிகளைக் கைப்பற்றிய காவல்துறையினர் அதன் அடிப்படையில் குற்றவாளியைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து கைது செய்தனர். இதனையடுத்து போலீசார் அவரை திடீரெனஅழைத்துக் கொண்டு ஆரம்பாக்கம் காவல் நிலையம் நோக்கி புறப்பட்டனர். எனவே அவரை அங்கு வைத்து அதாவது புகார் அளிக்கப்பட்ட காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக முதலில் கூறப்பட்டது. இத்தகைய சூழலில் தான் காவல்துறையினர் மிகுந்த பாதுகாப்போடு அந்த நபரை தமிழ்நாடு மற்றும் ஆந்திர எல்லைப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஆந்திர மாநிலத்தின் சூலூர்பேட்டை நோக்கி வாகனம் சென்றது.
அதன்படி சூலூர்பேட்டை அருகே உள்ள குப்பாரட்டி பள்ளம் என்ற இடத்தில் இவர் பணியாற்றிய தாபா ஹோட்டலில் வைத்து டி.எஸ்.பி. புழேந்தி, டி.எஸ்.பி. ஜெயஸ்வி மற்றும் டி.எஸ்.பி. தமிழரசி உள்ளிட்ட தனிப்படை காவல் துறையினர் கைது செய்யப்பட்ட அசாம் மாநிலத்தை சேர்ந்த ராஜு என்ற இளைஞரை அழைத்து சென்று விசாரணை செய்தனர். இவர் எத்தனை நாட்களுக்கு முன்பு இங்கு பணியில் சேர்ந்தார் என்பது குறித்து அங்கு பணியாற்றி வரும் வடமாநிலத்தவர்களிடம் விசாரணை செய்தனர். எதற்காக இவர் ஆரம்பாக்கம் பகுதிக்கு வந்தார்?, எப்படி இந்த பணியில் இருந்த போது இத்தகைய கொடூர செயலை செய்தார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள ராஜூ கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பின்னர் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்க மாவட்ட நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.