திருவள்ளூர் மாவட்டம் ஆரப்பாக்கத்தில் கடந்த 12ஆம் தேதி (12.07.2025) சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட நபரைப் பிடிக்க 20 தனிப்படைகள் அமைக்கப்பட்டுக் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். சுமார் 13 நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு நேற்று (25.07.2025) மாலை 4 மணி அளவில் ஆந்திர மாநிலத்தில் உள்ள சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் வைத்து குற்றவாளி கைது செய்யப்பட்டார். போக்சோ, குழந்தையைக் கடத்துதல், கடுமையான ஆயுதங்களை வைத்துத் தாக்குதல் மிரட்டுதல் மற்றும் உடலுக்குத் தீங்கு விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து கவரப்பேட்டைக் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளியிடம் 15 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது அவர் தனது அடையாளத்தை மாற்றி மாற்றிச் சொல்வதாக தகவல் வெளியாகியிருந்தது. விசாரணை இறுதியில் கைது செய்யப்பட்டவர் டெல்லியை சேர்ந்த ராஜு பிஸ்வ கர்மா(25) என்பது தெரியவந்தது.
பின்னர் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ராஜு பிஸ்வ கர்மா அதன் பின்னர் அங்கிருந்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டான். ராஜு பிஸ்வ கர்மாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து ராஜூவை புழல் சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் செல்லப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.