"பொய் மட்டுமே பேசி, தமிழ்நாட்டையும் தமிழர்களையும் இழிவுபடுத்துவதுதான் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் பதவியில் இருப்பதற்தற்கான ஒரே தகுதியா?" என தமிழக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா காட்டமாக விமர்சித்திருக்கிறார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஜெர்மனியில் தமிழ்நாடு முதலமைச்சர் முதல் நாளிலேயே ரூ3,201 கோடி ரூபாய்க்கான முதலீட்டு ஒப்பந்தங்கள் போட்டுள்ள நிலையில், அதில் ஒரு நிறுவனமான Knorr-Bremse சென்னையில் உள்ள நிறுவனம் என்றும் அதனுடன் ஜெர்மனியில் போய் ஒப்பந்தமா என  நயினார்  கேட்டிருப்பது, தொழில்துறை சார்ந்த அவருடைய புரிதல் எவ்வளவு குழந்தைத்தனமாக உள்ளது என்பதையே காட்டுகிறது.

Knorr Bremse 120 ஆண்டுகால வரலாறு கொண்ட ஜெர்மானிய நிறுவனம். இவர்களுக்கு தமிழ்நாட்டில் உற்பத்தி சார்ந்த எந்த தொழிற்சாலையும் கிடையாது. சென்னையில் சமீபத்தில் திராவிட மாடல் அரசின் முயற்சிகளால் அவர்களது முதல் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அலுவலகம் துவங்கப்பட்டது.  தற்போது 2,000 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாட்டில் அவர்களது முதல் ரயில் பாகங்கள் உற்பத்தி  தொழிற்சாலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான புதிய உயர் தர வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

மகாராஷ்ட்ரா பா.ஜ.க. முதலமைச்சர் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் இருந்து 15 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்தார் என்கிறார் பா.ஜ.க மாநிலத் தலைவர். தேவையில்லாமல் வாயை கொடுத்து இவரும் மாட்டிகொள்கிறார், அவரது தோழர்களையும் மாட்டி விடுகிறார். டாவோஸ் நகரிலிருந்து  மகாராஷ்ட்ரா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள இந்தியத் தொழில் நிறுவனங்களுடன் அதுவும் அவர்களது தலைநகரமான மும்பையிலேயே உள்ள reliance நிறுவனத்தோடு வீடியோ கான்பரன்சில் பேசி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்  போட்ட கதைகளை தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அறிந்துகொள்வது நல்லது. டாவோசில் அமர்ந்து இந்தியாவை சேர்ந்த reliance நிறுவனத்துடன் video conference மூலம் MoU போடும் பித்தலாட்டங்கள் அனைத்தையும் நாடு அறியும். திராவிட மாடல் அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு ஒருபோதும் இது போன்ற சில்லறை வேலைகளை செய்வதில்லை.

Advertisment

இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளுடன் அதிகளவில் வேலை வாய்ப்புகளை வழங்கும் மாநிலம் தமிழ்நாடுதான் என்பதையும், பொருளாதாரத்தில் இரட்டை இலக்கத்தை அடைந்து  சாதனை படைத்திருப்பதையும் பா.ஜ.க தலைமையிலான ஒன்றிய அரசே புள்ளிவிவர அறிக்கையுடன் சான்றிதழ் தந்துள்ள நிலையில், தமிழ்நாட்டை இழிவுபடுத்தும் போக்கை இனியாவது கைவிட்டு, உண்மைத் தரவுகளை அறிந்துகொள்ள ஓரளவாவது முயற்சி எடுக்குமாறு தமிழ்நாடு பா.ஜ.க. தலைவரை கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.