Minister TRB Raja response to Edappadi Palaniswami accused Industrial companies
விளம்பர மாடல் நிகழ்ச்சிகளும், வர்ணஜால விளம்பரங்களையும் காட்டினால் மட்டும் தொழில் நிறுவனங்கள் வந்துவிடுமா? எனவும் வருவதாக சொன்ன நிறுவனங்கள் தமிழ்நாட்டை விட்டு வேறு மாநிலங்களுக்குச் செல்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை குற்றம் சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “வருவதாக சொன்ன நிறுவனங்களே பேக் ஆப் செய்யும் நிலையில் தான் முதல்வர் மு.க. ஸ்டாலினின் ஆட்சி இருக்கிறது. இதற்கு ஆன காரணங்கள் ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். சீர்கெட்ட சட்டம் ஒழுங்கு, படுகுழியில் பெண்கள் பாதுகாப்பு, விண்ணை முட்டும் கமிஷன் ஊழல்கள் என அடிப்படையே சீர்குலைந்த இந்த ஆட்சி, விளம்பர மாடல் நிகழ்ச்சிகளும், வர்ணஜால விளம்பரங்களையும் காட்டினால் மட்டும் தொழில் நிறுவனங்கள் வந்துவிடுமா?. முதல்வர் தான் இப்படி என்றால், அவர் அரசில் தொழில் துறைக்கு வாய்த்திருக்கும் அமைச்சரோ, வெள்ளைப் பேப்பரைக் காட்டும் அமைச்சராக தான் இருக்கிறார்.
இத்தகைய வெறும் ஷோ ஆப் ( Show-off) ஆட்சியாளர்கள் நடத்தும் ஆட்சியில், எப்படி தொழில்கள் தமிழகத்திற்கு வரும்?. தமிழ்நாடு தொழில்களுக்கான வாய்ப்புகளின் பூமியாக இருந்தது. இன்று, அது தவறவிட்ட வாய்ப்புகளின் பூமியாக மாறிவிட்டது - முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில். புதிய தொழில்களால் தங்களுக்கு வேலை கிடைக்கும் என நம்பிய தமிழக இளைஞர்களை ஏமாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசுக்கு எனது கடும் கண்டனம்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தொழில்துறை முதலீடுகள் பற்றியோ பரவலாக்கப்பட்ட வளர்ச்சி பற்றியோ வேலை வாய்ப்புகள் பற்றியோ எந்தவித அடிப்படை புரிதலுமின்றி வழக்கம்போல திருமண வீட்டில் ஊர் வம்பை பேசும் பெருசுகள் போல குற்றம்சாட்டி இருக்கிறார். முதலீட்டு ஊக்குவிப்பு என்பது கையால் பாம்பு டான்ஸ் போடுவதுபோல சாதாரண விளையாட்டு அல்ல. தமிழ்நாட்டின் எந்த இடத்திற்கு முதலீடு செல்கிறதோ அதைப் பொறுத்து ஊக்கத்தொகை வழங்குவது, அப்பகுதியில் முன்னரே அமைந்திருக்கும் தொழிற்சாலைகளின் வகை போன்ற பல விடயங்களை பொறுத்தே அரசு ஒரு முடிவை எடுக்கிறது. அதற்கு பிறகே முதலீடு உறுதி செய்யப்பட்டு ஒரு ஒப்பந்தம் முதலீடாக மாறுகிறது. அந்த முதலீட்டின் மூலம் உருவாகும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை உருவாக்குவதே நமது முதலமைச்சரின் நோக்கம். அதுவே நமது இலக்கு.
அரசாங்கம் என்பது மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய அமைப்பாகும். சில மாநிலங்களில் வறண்ட பெரிய நிலப்பரப்புகள் உள்ளன. நாட்டின் #1 நகரமயமாக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு என்பதால் நம்மிடம் இருப்பவை அதிக மதிப்புள்ள நிலங்களாகும். புதிதாக முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை மற்றும் அந்த நிறுவனங்கள் மூலம் கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகள் ஆகியவற்றின் மதிப்பை ஒப்பிடாமல் அந்த நிலங்களை சாதாரணமாக கொடுத்துவிட முடியாது. தமிழ்நாட்டின் பரவலாக்கப்பட்ட வளர்ச்சி நோக்கத்திற்கு உதவாத முகலீடுகளுக்கு நாம் அதிக முக்கியத்துவத்தை கொடுப்பதில்லை. ஏனென்றால், அதே இடத்தில் பல நிறுவனங்கள் பல திட்டங்களோடு ஒவ்வொரு நாளும் நமது முதலமைச்சரின் அலுவலகத்தை நாடுகிறார்கள். உலக முதலீட்டாளர்களுக்கு நமது திராவிட நாயகன் அவர்களின் ஆட்சி மீது இன்று இருக்கும் நம்பிக்கை அப்படிப்பட்டது.
2021 முதல் திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை போடப்பட்ட ஆயிரத்திற்கும் மேலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 77% க்கும் மேலான ஒப்பந்தங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. முதலீட்டாளர்கள் இடையே தமிழ்நாடு இந்தியாவின் மிகச்சிறந்த நம்பகத்தன்மை நிறைந்த மாநிலம் என்ற பெயரை திராவிட மாடல் அரசு மூலம் பெற்றுள்ளது. இந்த நற்பெயரை நாம் மிகுந்த முதிர்ச்சியோடு காப்பாற்ற வேண்டும். மக்கள் வரிப்பணத்தை மற்ற மாநிலங்களைப் போல நாம் அள்ளி வீசமாட்டோம். ஒன்று இல்லையென்றால், நமக்கு நூறு லைனில் இருக்கிறது. நாம் வேறு எந்த மாநிலத்தையும் விட சிறந்த உற்பத்தி சக்தியாக இருக்கிறோம். நமக்கு நமது மதிப்பு தெரியும், நமது பலம் தெரியும், அதற்கு ஏற்றவாறு செயல்படுவோம்.
எதிர்க்கட்சித் தன் அரசியல் கணக்குகளுக்காக திமுக அரசை விமர்சிப்பதாக நினைத்து, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்து தமிழ்நாட்டின் நலனை முதன்மைப்படுத்தும் கடின உழைப்பாளிகளான அரசுத் துறை சார்ந்தவர்களையும், மாநிலத்தின் வளர்ச்சிக்கு கடின உழைப்பை வழங்கும் தொழிலாளர்களான மக்களை அவமதிக்கும் கீழ்த்தரமான செயலை மேற்கொள்வது நல்லதல்ல. தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரான வகையில் உண்மைக்கு மாறான, அரைகுறை தகவல்களை தன்னுடைய எஜமானக் கட்சியின் அதிகாரம் இழந்த பிரதிநிதி பேசிவிட்டார் என்பதற்காக, போட்டிக்காக அவர் சொன்ன பொய்யையே வெளியிடுவது எதிர்க்கட்சித் தலைவருக்கு அழகல்ல. இதுவே கடைசியாக இருக்கட்டும். இனியும் தொழில்துறை சார்ந்த முதலீடுகள் தொடர்பான தன் அறியாமையை வெளிப்படுத்தி அவமானப்பட வேண்டாம் என ஒரு தமிழனாக கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Follow Us