Minister TRB Raja responds to Praveen Chakravarthy's criticism on Economic policy
காங்கிரஸ் கட்சியின் தரவு மேலாண்மை மற்றும் வல்லுநர் குழுவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி, எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “அனைத்து மாநிலங்களையும் விட தமிழகம் தான் அதிக கடன் நிலுவையில் உள்ளது. 2010 ஆம் ஆண்டில், உத்தரப் பிரதேசத்தின் கடன் தமிழகத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது. இப்போது, ​​உத்தரப் பிரதேசத்தை விட தமிழகத்தின் கடன் அதிகமாக உள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் வட்டிச் சுமை (%) 3வது அதிகமாக உள்ளது. கோவிட்க்கு முந்தைய அளவை விட தமிழ்நாட்டின் கடன் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி இன்னும் அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டின் கடன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், அக்கூட்டணியில் இருந்து விலகி தவெகவுடன் இணையவுள்ளதாக சில தினங்களுக்கு செய்தி வெளியானது. அதன்படி, காங்கிரஸ் நிர்வாகியான பிரவீன் சக்கரவர்த்தி, தவெக தலைவர் விஜய்யை சந்தித்துப் பேசியது பெரும் சர்ச்சையானது. அப்போது திமுகவுன் காங்கிரஸ் கூட்டணியில் தொடரும் என காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த சூழலில், திமுக அரசின் பொருளாதார கொள்கை மீது காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி விமர்சனம் செய்திருப்பது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில் பிரவீன் சக்கரவர்த்தி விமர்சனத்துக்கு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில், “தனிப்பட்ட நோக்கங்களைக் கொண்ட எவருடனும் விவாதம் செய்வதை தவிர்த்து நமது சுற்றுச்சூழல் அமைப்பை வலியுறுத்துங்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் குறைக்க முயற்சிப்பவர்களுடன் நாம் ஒரு பெரிய போரை எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது. தேவையற்ற கவனச்சிதறல்கள் வேண்டாம், எச்சரிக்கையாக இருங்கள்.
நமது தலைவர்களின் பாதையைத் திறக்கும் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி சார்ந்த எண்ணங்களில் கவனம் செலுத்துங்கள். நமது தலைவரின் திராவிட மாடல் அரசாங்கத்தின் சாதனைகளைப் பகிர்ந்து கொள்ள உங்கள் நேரத்தைப் பயன்படுத்துங்கள். திசைதிருப்பும் சூழ்ச்சிகளில் சிக்கிக்கொள்ளாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
Follow Us