“காஸ் சிலிண்டர் விலை உயர்ந்து வளர்ந்து நிற்பது இ.பி.எஸ்.க்கு தெரியாதா?” - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கேள்வி!

trb-raja-mic

காஸ் சிலிண்டர் விலை உயர்ந்து வளர்ந்து நிற்பது இ.பி.எஸ்.க்கு  தெரியாதா? என தமிழக தொழில்துறை அமைச்சரும், திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளருமான டி.ஆர்.பி. ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு சில நாட்களுக்கு முன்பு ‘முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பூரண நலம் பெற வேண்டும்’ என சுந்தரா டிராவல்ஸ் யாத்திரையில் சொன்ன அதே எதிர்கட்சி தலைவரின் நாக்குதான் இப்போது ஆஸ்பத்திரியில் டேபிள் மீட்டிங் என நர்த்தனம் ஆடுகிறது. அது சரி பொதுவாக எல்லோரும் டேபிள் முன்பு அமர்ந்துதான் மீட்டிங் போடுவார்கள் என்பது தெரியாமல்தானே பழனிச்சாமி பாவம் டேபிளுக்கு அடியில் மீட்டிங் போட்டார்.

அரசு அலுவல்கள் அனைத்தும் தடையின்றி நடைபெறுகிறதா? என அதிகாரிகளை அழைத்து ஆய்வு செய்வது, உங்களுடன் ஸ்டாலின் எனும் மகத்தான திட்டத்திற்கான முகாம்கள் திட்டமிட்டபடி நடைபெறுகிறதா என தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் விவரங்கள் கேட்பது, காணொளிக் காட்சி வாயிலாக கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துவது. பொதுமக்களுடன் வீடியோ காலில் பேசி முகாமின் செயல்பாடுகள் திட்டமிட்டபடி மக்களுக்கு சென்றடைகின்றனவா? என்று நேரடியாக பயனாளிகளிடம் கேட்டறிதல், பிரதமர் மோடியின் தமிழ்நாட்டுப் பயணத்தின் போது மாநிலத்தின் வளர்ச்சிக்காக நாம் பெற வேண்டிய திட்டங்களுக்காக கடிதம் தயார் செய்து அனுப்பி வைத்தது என மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி சில நாட்கள் மருத்துவமனையில் இருந்தபோதும் தொடர்ந்து தடையின்றி தனது மக்கள் பணியை செய்தார் திராவிட நாயகன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். 

ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடியவர்கள் மீது துள்ளத் துடிக்கத் துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரைப் பலி வாங்கிவிட்டு, டிவியில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன் எனச் சொன்னவர் தான் இந்த எதிர்க்கட்சித் தலைவர். எந்த காலத்திலும் உருப்படியாக முதலமைச்சர் பணிகளையே செய்யாத எதிர்க்கட்சித் தலைவருக்கு இவையெல்லாம் ஆச்சரியமாகத்தான் இருக்கும். அம்மா இட்லி சாப்பிட்டார்; செவிலியர்களுடன் பந்து விளையாடினார்; விரைவில் வீடு திரும்புவார்; டிவி பார்த்தார்; கிச்சடி சாப்பிட்டார்; நர்ஸ்களுக்குப் பரிசு கொடுத்தார்; டாக்டர்களுக்கே அறிவுரை கூறினார் என்றெல்லாம் திரைக்கதை எழுதி நாடகம் போட்டவர்களே உங்கள் தரம் தாழ்ந்த எண்ணங்களை உலகிற்கு பறைசாற்றாதீர்கள். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் வரை ஒன்றிய அரசின் ‘உதய் மின் திட்டத்தில்’ அவர் கையெழுத்து போடவில்லை. அவர் மறைந்த பிறகு ஒடோடிப்போய் கையெழுத்து போட்டு தமிழ்நாட்டை வஞ்சித்தது சந்துகளில் இருந்து குரல் கொடுக்கும் ஷாக்க்ஷாத் பழனிசாமிதான் என்பது ஊருக்கே தெரிந்தபோதும் இன்று அவரே மின்கட்டணம் உயர்ந்துவிட்டது என நீலிக் கண்ணீர் வடித்திருக்கிறார். இப்படி, தானே ஏற்றிய மின்கட்டண உயர்வைக் குறித்து தானே பேசிவரும் பழனிசாமி, ஒன்றிய அரசின் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறித்து ஏன் பேச அஞ்சுகிறார்?. 2014ம் ஆண்டு ரூ.414ஆக இருந்த சமையல் காஸ் சிலிண்டர் விலை தற்போது ரூ.868.50ஆக உயர்ந்து வளர்ந்து நிற்பது எதிர்க்கட்சித் தலைவருக்குத் தெரியாதா? அல்லது எப்போதும் போல நடிக்கிறாரா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

dmk admk Edappadi K Palaniswamy electricity bill gas cylinder price trb rajaa
இதையும் படியுங்கள்
Subscribe