தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

Advertisment

அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்ட்கள் துணையோடு தேர்தல் ஆணைய அதிகாரிகள், வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். எஸ்.ஐ.ஆர் (SIR) படிவங்களை வீடு வீடாக கொடுத்து இடம்பெயர்ந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக உள்ளவர்கள், படிவங்களை நிரப்பாதவர்கள், ஆவணங்களை வழங்காதவர்கள் ஆகியவற்றவர்களை கண்டறிந்து திருத்தப் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisment

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், நாதக, தவெக ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை எதிர்த்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளன. அதன்படி, உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், எஸ்.ஐ.ஆர் படிவங்களை பதிவேற்றுவதில் சிரமம் உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “கடந்த இரண்டு நாட்களாக எஸ்.ஐ.ஆர் படிவங்களைப் பதிவேற்றுவதில் மெதுவான சர்வர் சிக்கல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. பல பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்படாமல் சும்மா கிடக்கின்றன! சர்வர் ஏன் வேகமாக செயல்படவில்லை??? தேர்தல் ஆணையம், தயவுசெய்து உடனடியாக இந்தப் பிரச்சினையைப் பாருங்கள். தேர்தல் ஆணையம் இந்தப் பிரச்சினைக்கு பதிலளிக்காதது மேலும் கேள்விகளை எழுப்புகிறது. இந்த சர்வர் சிக்கல் தீர்க்கப்படுமா அல்லது இது ஒரு அறிகுறியா?

Advertisment

தேர்தல் ஆணையத்தின் அழுத்தத்தை சமாளிக்க, இரவு பகல் பாராமல் வேலை செய்ய வேண்டியிருப்பதாக பணியில் உள்ள பல அதிகாரிகள் கூறுகின்றனர். வேலையில் இருப்பவர்களுக்கு பைத்தியக்காரத்தனமான பணிச்சுமை மன வேதனையை ஏற்படுத்துகிறது. இங்குள்ள அதிகாரிகள் டெல்லியில் உள்ள உயர் அதிகாரிகளை அணுகி நிலைமையை விளக்கி ஒரு தீர்வைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். கடைசி தேதி நெருங்கி வருகிறது, கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு வேலை நிலுவையில் உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.