தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 23ஆவது அமைச்சரவைக் கூட்டம் இன்று (05.02.2026) நன்பகல் 12 மணிக்கு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் மற்றும் துறை  சார்ந்த உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Advertisment

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது குறித்தும், அதில் இடம்பெற வேண்டிய திட்டங்கள் குறித்தும், அதற்கு ஏற்படக்கூடிய செலவுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, சட்டமன்ற தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு இக்கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

Advertisment

இந்த கூட்டத்திற்கு பிறகு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “ஏறத்தாழ 15 முதலீட்டு திட்டங்களுக்கு முதலமைச்சர் தலைமையில் நடந்த அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக ஒட்டுமொத்தமாக 34  ஆயிரத்து கோடியே 237.39 ரூபாய்க்கான முதலீடு, 55 ஆயிரத்து 96 நபர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாகக்கூடிய பல திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கிருக்கிறது. இத்திட்டங்கள் மாநிலத்தின் பரவலான வளர்ச்சிக்கு உறுதி செய்யும் விதமாகவும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், திருப்பூர், ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் அமைக்கப்பட உள்ளன.

இதில் மிக முக்கியமான ஒரு திட்டம் வருகிற 13ஆம் தேதி அறிவிப்பு வெளிவரும். தமிழ்நாட்டில் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை தொடர்ந்து உறுதி செய்து, இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலம் தமிழ்நாடு தான் என்பதை தொடர்ந்து உறுதி செய்யும் இந்த வேலையை முதல்வர் செய்து கொண்டிருக்கிறார்” என்று கூறினார். 

Advertisment