மகளிர் முன்னேற்றத்திற்காக அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னெடுப்பில் நடைபெற்ற சுய தொழில் பயிற்சிகளில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
“மகளிரின் உழைப்பால் மலரட்டும் திருச்சுழி!” என்ற இலக்குடன் தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சரும், திருச்சுழி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசுவின் தனிப்பட்ட முன்னெடுப்பில் காரியாபட்டியில் பெண்களுக்கான இலவச தொழிற்பயிற்சி முகாம் நடைபெற்றது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/25/5-2025-11-25-15-35-51.jpg)
இந்த முகாமில் சிறு தொழில் பயிற்சி, உணவுப் பொருள் தயாரிப்பு, கைவினைப் பொருள்கள், செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு, அழகியல் சார்ந்த பயிற்சி உள்ளிட்ட பல்துறை திறன் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இப்பயிற்சியில் 15 வயது முதல் 70 வயது வரையிலான அனைத்து தரப்பு பெண்களும் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட கல்லூரி மாணவி கவி த்ரிஷா “இன்ஸ்டாகிராமில் வந்த பதிவைப் பார்த்துவிட்டு இங்கு வந்தேன். தற்போது இறுதியாண்டு பொறியியல் மாணவியான நான் விடுமுறை நாட்களில் பயனுள்ள வகையில் சோப் தயாரிப்பதை கற்றுக் கொண்டுள்ளேன். இந்த சோப் தயாரிப்பு பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. முதலில் சோப் எப்படி செய்வது என செய்து காட்டுகிறார்கள், பிறகு நாமே செய்கிறோம். இதனால் மிக எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது. மேலும், வெளியில் நிறைய பணம் கொடுத்து வாங்கும் சோப்பை இனி நானே தயாரித்து, சிறிய தொழிலாகவோ அல்லது உறவினர்களுக்குப் பரிசாகவோ கொடுக்கலாம் என்ற உத்வேகம் பிறந்துள்ளது.” என்றார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/25/7-2025-11-25-15-36-05.jpg)
தீபா பாண்டியராஜ் “இந்தப் பகுதி வானம் பார்த்த பூமி என்பதால் பெரும்பாலும் கடலை,எள், சோளம் போன்ற பயிர்கள் மட்டுமே நடவு செய்யப்படும். இதனால் இப்பகுதியில் போதிய வேலைவாய்ப்பு இல்லை. பெண்கள் பூ தொடுத்தல், கட்டப்பை தைத்தல் போன்ற சிறு வேலைகளையே செய்கின்றனர். இந்நிலையில் இதுபோன்ற இலவச தொழிற்பயிற்சி மூலம் பெண்கள் தாங்களே பொருள் தயாரித்து விற்று பொருளாதார ரீதியில் தன்னிறைவு பெறமுடியும். ஒருவருக்கு கற்றுக்கொடுத்தால், அவர் மற்றவர்களுக்கு கற்பிப்பார். இவ்வாறு சங்கிலித் தொடராக அமைந்துள்ளதால், தொழில் பயிற்சியும் வேலைவாய்ப்பும் பெண்களிடையே பெருகும். கண்டிப்பாக இந்த முகாம் பெண்களை வெற்றிகரமான தொழில்முனைவோராக உருவாக்கும் என்று நம்புகிறேன்.” என்றார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/25/4-2025-11-25-15-36-24.jpg)
அமைச்சர் தங்கம் தென்னரசு தொடர்ந்து மகளிர் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளும் இத்தகைய தன்னார்வ முயற்சிகள் கிராமப்புற பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
Follow Us