2026 - 2027ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காகத் தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (17.02.2026) காலை 09:30 மணிக்குக் கூடியது. அப்போது இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றினார். அந்த உரையில், “கடந்த 5 ஆண்டுகளில் ஆட்சேபனையற்ற அரசு நிலங்களில் வசிப்போருக்கு ஒருமுறை சிறப்பு வரன் முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் 77 ஆயிரத்து 800 இணையவழி பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. கப்பல் கட்டுமானம், கப்பல் இயந்திரங்கள் உற்பத்தி ஆகிய துறைகளில் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு கப்பல் கட்டும் கொள்கை விரைவில் வெளியிடப்படும். இதனால், கப்பல் கட்டுமானத்திற்கான உலகளாவிய மையமாகத் தமிழ்நாடு உருவெடுக்கும்.
32 மாவட்டங்களில் இருந்து தகவல் தொழில் நுட்ப ஏற்றுமதி பதிவாகி உள்ளது. திருச்சி, மதுரை, ஓசூர் ஆகிய இடங்களில் புதிய டைல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் ரூ.388 கோடியில் புதிய மினி டைடல் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, வேலூர், காரைக்குடி, திருப்பூர் ஆகிய 7 இடங்களில் நியோ டைடல் பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன. நாமக்கல், திருவண்ணாமலை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, நாகப்பட்டினம், கரூர், புதுக்கோட்டை ஆகிய 9 இடங்களில் நியோ டைடல் பூங்காக்கள் ரூ. 388 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் மூலம் 25 ஆயிரம் 500 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இடைக்கால பட்ஜெட்டில் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ரூ. 219 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மறுபரிசீலனை செய்து ஒப்புதல் வழங்க, மத்திய அரசைத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கோயில்களைப் புனரமைத்துப் பாதுகாக்கும் நோக்கில், ரூ. 425 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 84 கோயில்களில் குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளன. 19 முக்கிய கோயில்களில் ரூ. 1000 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.
Follow Us