Minister Thangam thennarasu response to EPS's question
இந்தாண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் 2026-2027ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த 17ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த இடைக்கால பட்ஜெட் குறித்து விவாதம் தமிழக சட்டப்பேரவையில் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விவாதத்தின் போது நேற்று திமுக - அதிமுக இடையே காரசார வாதம் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று (19-02-26) தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழக அரசு மீது கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக அவர் பேசியதாவது, “திமுக தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால், அதனை திமுக அரசு கொண்டு வரவில்லை. அரசுக்கு எதிராக பல சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன” என்று குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அதற்கு பதிலளித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “பங்களிப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அழுத்தம் திருத்தமாக பேசுகிறார். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்ததே அதிமுக ஆட்சி காலத்தில் தான். 2003ஆம் ஆண்டில் தான் இது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியா முழுவதும் வந்த போது தமிழகத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் அப்போது இருந்தது. ஆனால், அதை இந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை. செயல்படுத்த முடியாது என்று அதிமுக கூறிய நிலையில் திமுக இதை செயல்படுத்திருக்கிறது.
உங்களுக்கு ஓபிஎஸ் (ஓ.பன்னீர்செல்வம்) பிடிக்கவில்லை என்பது வேறு, ஆனால் இந்த ஓபிஎஸ் (Old Pension Scheme) வேறு” என்று நகைச்சுவையாக பேசினார். இதை கேட்டவுடன் அவையில் சிரிப்பொலி எழுந்தது. அதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி எழுந்து பேசுகையில், “எங்கள் மீது பழியை சுமத்த வேண்டாம். மத்திய அமைச்சரவையில் திமுக அங்கம் வகித்த காலத்தில் தான் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது. அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட குடிமராமத்து திட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளது. அதே போல் பொங்கலுக்கு வழங்கப்படும் சேலை, வேட்டி கூட முழுமையாக வழங்கப்படவில்லை” என்று அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
Follow Us