2026 - 2027ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (17.02.2026) காலை 09:30 மணிக்கு கூடியது. அப்போது சபாநாயகர் அப்பாவு, “ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள் போற்றி வழங்கும் நெறி” என்ற திருக்குறளை வாசித்தார். அதற்கான பொருளாக வருவாய் அளவை அறிந்து அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராக காத்து வாழும் வழியாகும்” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இடைக்கால நிதிநிலையைத் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அதில், “தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்கும் இறுதிப் போரைத் தொடங்கியுள்ளோம். ஏற்றுமதியைப் பெருக்கி, பண வீக்கத்தைக் குறைத்து, உயர்ந்த பொருளாதார வளர்ச்சியைத் தமிழ்நாடு அடைந்துள்ளது.
தமிழ்நாடு இரட்டை இலக்கு பொருளாதார வளர்ச்சியை அடைய பல்வேறு நல்ல திட்டங்களைச் செயல்படுத்திய முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி” எனத் தெரிவித்து உரையாற்றி வருகிறார். முன்னதாக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கலையொட்டி ‘காது குத்தும் விழா’ என்ற அழைப்பிதழுடன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவை வந்திருந்தனர். அப்போது இடைக்கால பட்ஜெட் என்னும் பெயரில் தமிழக மக்களுக்கு திமுக அரசால் காது குத்தும் விழா நடைபெறுவதாக அவர்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இடைக்கால வேளான் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார். அதே சமயம் தேர்தல் காரணமாக பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் எனவும் தமிழக மக்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Follow Us